கோவை: தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசியல் பேசுவேன் என்று ஆளுநர் தமிழிசை கூறினார். தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை கோவை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: ஜெய் ஸ்ரீராம் என கூறியதால் மற்ற மதத்தை சார்ந்தவர்கள் எதுவும் கூற வேண்டாம் என கூறவில்லை. யாருக்கும் உள்ளுணர்வாக எதை கூறி வெற்றியை கொண்டாட தோன்றுகிறதோ அதை சொல்லிக் கொண்டாடட்டும். இதை எல்லா மதத்தினரும் செய்கின்றனர்.
வெற்றியின் வெளிப்பாடாக உற்சாகத்தோடு இறைவன் தான் அந்த வெற்றியை கொடுத்தார் என்பதை சொல்லும்போது தப்பில்லை. நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றியதற்கு நன்றி கூற வேண்டும். இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதில் இந்தியா மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. உக்ரைன், காசா போர் மற்றும் கொரோனா காலகட்டங்களின்போது, பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டில் மிக பத்திரமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
இந்தியர்கள் உலகில் எந்த பகுதியில் பிரச்னையில் இருந்தாலும் அவர்களை ஒன்றிய அரசு பத்திரமாக மீட்டு வரும். தெலங்கானாவிலும், புதுச்சேரியிலும் நான் முதல் சிட்டிசன். அதனால், அங்கு அரசியல் பேசமாட்டேன். ஆனால், தமிழ்நாட்டில் நான் பொதுவான சிட்டிசன். அதனால், இங்கு எனது கருத்தை முழுமையாக பதிவு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.