காபூல் : ஆப்கானிஸ்தானில் 3ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தாலிபன் அரசு தடை விதித்துள்ளது.அழகு நிலையங்கள், பூங்காக்கள், உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றிற்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது சிறுமிகளுக்கும் கல்வி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தாலிபான் அரசு ஆப்கானிஸ்தானை தன்வசம்படுத்தியது. அன்று முதல் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்தது. முதலில் பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடை விதித்தது. அதன்பின் பூங்கா, சினிமா மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் பெண்கள் வேலை செய்யவும், பொது இடங்களுக்கு ஆண்கள் துணையின்றி செல்லவும் தடை விதித்தது.இதன் தொடர்ச்சியாக, பெண்கள் அழகு நிலையங்களுக்கு தாலிபன் அரசு தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் மீதான அடுத்தகட்ட தாக்குதலாக 3ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தாலிபன் அரசு தடை விதித்துள்ளது.தலிபான் அரசின் கல்வித் துறை, 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுமதி இல்லை என சில மாகாணங்களில் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் பயிற்சிக் கூடங்களின் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளது.10 வயதுக்கு மேல் உள்ள பெண் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பவும் அவர்களுக்கு தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. தங்களை பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என அந்த நாட்டில் ஆறாம் வகுப்பு வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஆப்கானில் பெண்களுக்கு கிடைக்கும் சுதந்திரத்தை தாலிபான் அரசு புதிய உத்தரவு மேலும் மோசமடைய செய்துள்ளதாக மகளிர் அமைப்புகள் குற்றச்சாட்டியுள்ளது.