சென்னை: தக் லைஃப் திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது என்ற சொல்லியதற்காக கன்னட அரசியல் அமைப்பினர் கமல்ஹாசனை புறக்கணித்து தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட கூடாது என போராடி வருகின்றனர். அது ஒருபுறம் இருக்க, நாளை வெளியாக உள்ள தக் லைஃப் திரைப்படத்தை 793 இணையத்தளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.
அந்த மனுவில், மிகுந்த பொருட்செலவில் தக் லைஃப் திரைப்பட தயாரிக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். இணையதளங்களில் தக் லைஃப் படம் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த வழக்கு விசாரணையில் நாளை வெளியாகும் தக் லைஃப் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.