சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைப் திரைப்படம் நாளை (ஜூன் 5ம் தேதி) வெளியாகிறது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் கமல், தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு கன்னட அமைப்பினர் இடையே கோபத்தை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காக கர்நாடகாவில் போராட்டம் நடந்து வருகிறது. கன்னட சினிமா வர்த்தக சபையும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத வரை சினிமா வெளியிட அனுமதி அளிக்க மாட்டோம் என கூறி தடை விதித்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தக் லைப் சினிமா திரையிடுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று ராஜ்கமல் இன்டர் நேஷனல் சார்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நேற்று பகலில் நீதிபதி எம்.நாகபிரசன்னா விசாரணை நடத்தினார். விசாரணையின் போது ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேன் சின்னப்பா, கமல்ஹாசன் கன்னடம் குறித்து தவறாக எதையும் பேசவில்லை. மன்னிப்பு கேட்பதற்கு இதில் எதுவும் இல்லை என கூறி சினிமா வெளியிடுவதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி நாகபிரசன்னா, “ஒரு சமூகத்தை பாதிக்க கூடிய அளவிற்கு பேசும் நீங்கள் என்ன ஆய்வாளரா அல்லது நிபுணரா?. பேசியது பேசியது தான். உடைந்த முட்டையை மீண்டும் எப்படி உருவாக்க முடியும். ஆனால் மன்னிப்பு கேட்கலாம். தவறுகள் நடக்கும்போது என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். படத்துக்கு கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும்.
இதற்கு முன்பு ராஜகோபாலச்சாரியும் மன்னிப்பு கேட்டுள்ளார். நீங்கள் செய்த தவறுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டுமா? என கோபமாக கேள்வி விடுத்தார். இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி நாகபிரசன்னா கமலின் பேச்சினால் சிவராஜ்குமாருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள். பிறகு எதற்காக இங்கே சினிமா திரையிட வேண்டும் என்று கேட்கிறீர்கள்? நானும் கூட தக் லைப் படம் பார்ப்பதற்கு விரும்பினேன். ஆனாலும் இதுபோன்ற விவாதத்தினால் அது நிறைவேறவில்லை என கூறி பிற்பகல் விசாரணைக்கு ஒத்தி வைத்தார். பிற்பகலில் விசாரணைக்கு வந்த போது கமல்ஹாசன் தரப்பில், தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்கலாம். பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதற்காக எப்படி மன்னிப்பு கேட்க முடியும் என தெரிவித்து, கர்நாடகாவில் இப்போதைக்கு படத்தை திரையிடாமல் ஒத்திவைக்கிறோம் என கூறி ஒரு வாரம் காலஅவகாசம் கோரப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாகபிரசன்னா, “இப்போதும் நிலைமை மீறிவிடவில்லை. கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதம் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. அதில் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையை சேர்த்தால் நிலைமை சரியாகிவிடும். விவேகத்துடன் கமல் செயல்படவேண்டும்’’ என கருத்து தெரிவித்து விசாரணையை வருகிற 10ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். எனவே, கர்நாடக மாநிலத்தில் நாளை, தக் லைப் திரைக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது.
‘கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்’
கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் பாஜவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பா அவரது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: கன்னட மொழியின் தொன்மை குறித்து தவறான தகவல்களை கமல்ஹாசன் கூறியுள்ளார். தான் கூறிய தவறான கருத்திற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைதி சீர் குலைவதற்கு காரணமாக இருக்க வேண்டாம். மன்னிப்பு கேட்பதால் யாரும் சிறியவராகி விடுவதில்லை. அதேநேரம் நான் தான் பெரியவன் என்கிற தலைக்கணத்தினால் யாரும் பெரியவராகிவிட முடியாது. இவ்வாறு எடியூரப்பா கூறியுள்ளார்.