பெங்களூரு: தக் லைஃப்’ படத்தின் ப்ரோமோஷனின் போது, “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை தூண்டியது. இதையடுத்து அவர் நடித்துள்ள தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தனது படத்தின் வெளியீட்டிற்கு பாதுகாப்பு கோரி கமல்ஹாசன், கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, மொழி குறித்து பேச கமல்ஹாசன் என்ன மொழி ஆய்வாளரா இல்லை, வரலாற்று ஆய்வாளரா என வினவினார்.
பொதுவெளியில் ஒரு பிரபலமான நபர் இப்படி பேசலாமா என கமலுக்கு கேள்வியெழுப்பிய நீதிபதி, ஒரு மன்னிப்பு கேட்டிருந்தாலே இந்த பிரச்னை முடிந்திருக்கும் என்று கருத்து தெரிவித்தார். நீர், நிலம், மொழி இவை மூன்றுமே குடிமக்களுக்கு முக்கியமானது என்றும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்றும் நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொடர்ந்து மொழி குறித்த தனது பேச்சுக்கு கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பின்னர் மனு விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, கர்நாடக ஃபிலிம் சேம்பர் தலைவர் நரசிம்மலுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை. கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கன்னடர்கள் தங்கள் தாய்மொழி மீது வைத்து இருக்கும் அன்பு மீது மிகுந்த மரியாதை உண்டு. கன்னடம் குறித்த எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வழக்கு பிற்பகல் 2.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசன் கடிதம் திருப்தியாக உள்ளது; ஆனால் அதில் ஒரு வார்த்தையை சேர்க்க வேண்டும். அதாவது கமல்ஹாசனின் கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை விடுபட்டுள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது கமல் தரப்பில், நாங்கள் கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இந்தப் படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க தயாராக இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது.