திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக சமூக ஊடகப் பேரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.பாமகவில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒரு முடிவுக்கு வராமல் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே செல்கிறது. செயல்தலைவர் பதவியை அன்புமணி ஏற்க மறுத்து பிடிவாதமாக இருப்பதால், என் மூச்சு இருக்கும் வரை நானே தலைவராக இருப்பேன் என அறிவித்து ராமதாஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதற்கேற்றாற்போல் கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் சுறுசுறுப்பாக இறங்கி உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் பற்றி பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி வைத்தது எனக்கு தெரியாது மேலும் எனது குடும்பத்தில் இருக்கிறவர்கள் அரசியலில் இருக்கக் கூடாது என கூறி இருந்தேன் ஆனால் அதையும் மீறி எனது மருமகள் அரசியலுக்கு வந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை என பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் அன்புமணி மற்றும் சௌமியா மீது முன் வைத்தார். இந்த நிலையில் நேற்று பனையூரில் பாமக சமூக ஊடகப் பேரவை ஆலோசனைக் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அன்புமணி பேசுகையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ராமதாசிற்கு தெரிந்தே வைக்கப்பட்டது. கடந்த ஐந்து வருடங்களாக அவர் அவராக இல்லை குழந்தை போல் மாறிவிட்டார். அவரை மூன்று பேர் இயக்குகின்றனர் எனவும் வீட்டிற்கு வந்த மருமகளை பற்றி பொதுவெளியில் என்ன பேச வேண்டும் ராமதாசுக்கு தெரியவில்லை என அன்புமணி பல்வேறு குற்றச்சாட்டை வைத்தார். இந்த நிலையில் இன்று பாமக சமூக ஊடகப் பேரவை ஆலோசனை கூட்டம் தற்போது ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில் ராமதாஸ் சமூக வலைதளங்களில் கருத்துக்களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில் சமூக ஊடக பேரவை மாநில தலைவர் தொண்டி ஆனந்தன், சமூக உலக பெரிய மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையார், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.