Monday, June 23, 2025
Home செய்திகள்Banner News தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசுடன் அன்புமணி திடீர் சந்திப்பு: சமாதான பேச்சுவார்த்தை தோல்வி; பாஜ முயற்சியும் வீண்

தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசுடன் அன்புமணி திடீர் சந்திப்பு: சமாதான பேச்சுவார்த்தை தோல்வி; பாஜ முயற்சியும் வீண்

by Karthik Yash

திண்டிவனம்: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை, அன்புமணி நேற்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது அவர்களின் சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. பாஜ சார்பில் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையும் பலனளிக்கவில்லை. இதனால் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே மாநில இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தன் நியமன விவகாரத்தில் மோதல் வெடித்தது.

புதுச்சேரி அருகே நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பாமக பொதுக்குழு கூட்டத்தில் மேடையிலே தந்தை, மகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், அவர் செயல் தலைவராக செயல்படுவார், நானே பாமக நிறுவனரும், தலைவராகவும் இருப்பேன் என அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து, நான் என்ன தவறு செய்தேன், என்னை ஏன் பதவியில் இருந்து நீக்கினார் என்று அன்புமணி பொதுவெளியில் கேள்விகளை முன்வைக்க, நான் சொன்னதை செய்ய வேண்டியதுதானே செயல்தலைவரின் பணி என நிர்வாகிகளிடம் குமுறினார் ராமதாஸ்.

பின்னர் கடந்த 29ம்தேதி திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பேட்டியளித்த ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குடும்பத்திலும், கட்சியிலும் அவருக்கு அளிக்கப்பட்ட விதிமீறல் முன்னுரிமை தொடர்பாக நா தழுதழுத்தபடி கூறிய ராமதாஸ், அவரை 35 வயதிலேயே ஒன்றிய கேபினட் அமைச்சராக்கி நான்தான் தவறு செய்துவிட்டேன். அன்புமணி தலைமை பண்பு இல்லாதவர் என கண்ணீர் விட்டார். இது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பிறகு, நான் சுதந்திரம் அடைந்துவிட்டேன் என்று கூறிய அன்புமணி சென்னையில் பாமக நிர்வாகிகளுடன் தன்னிச்சையாக ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் தடாலடியாக நியமித்தார். 31 மாவட்ட செயலாளர்கள், 9 மாவட்ட தலைவர்களை மாற்றினார். இதனால் தந்தை- மகன் இடையிலான விரிசல் மேலும் அதிகரித்தது. ராமதாசின் தொடர் நடவடிக்கைகளால் அன்புமணியின் ஆதரவாளர்கள் கதிகலங்கினர். அவரை சமாதானப்படுத்த பாமக முன்னணி நிர்வாகிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இதனால் கட்சி நிர்வாகிகளில் சிலர் மனஉளைச்சலுக்கு ஆளானதோடு, மாற்றுக் கட்சிக்கு தாவ தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே அன்புமணி ஆதரவு நிர்வாகிகள் ராமதாஸ் பக்கம் சாயத் தொடங்கினர். இதனால் பாமகவில் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் படைத்தவராக கூறப்படும் நிறுவனர் ராமதாசின் கை ஓங்கியது. இதனிடையே நேற்று முன்தினம் த.வா.க. நிர்வாகியும், தலைவர் வேல்முருகனின் சகோதரருமான திருமால்வளவன், 14 வருடங்களுக்குபின் மரியாதை நிமித்தமாக ராமதாசை சந்தித்து பேசினார்.

வெளியே வந்த திருமால்வளவன், ‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. நான் வந்தது அன்புமணிக்கு பிடிக்காது. அதனால் ராமதாசை உடனடியாக சந்திக்க அன்புமணி வருவார்’ என தெரிவித்துவிட்டு கிளம்பினார். முன்னதாக கட்சிப் பதவியில் இருந்து விலகிய பரசுராமன் முகுந்தனும் ராமதாசை தனியாக சந்தித்து சிறிதுநேரம் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டார். இதனால் அன்புமணி தைலாபுரம் வந்து ராமதாசை சந்தித்து ேபசினால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பு ஏற்படும், இல்லாவிடில் அவரது எதிர்காலம் கேள்விக்குறிதான் என்ற பேச்சுகள் பாமகவில் எழுந்தன.

இதற்கிடையே வன்னியர் சங்க நிர்வாகிகளான திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்ட 6 பேர் நேற்று முன்தினம் அன்புமணியை சந்தித்து பேசினர். அப்போது பாமக செல்வாக்காக இருந்தால்தான் மற்ற கட்சியில் நிர்வாகிகளுக்கு பலம், நீங்கள் அடித்துக் கொண்டால் பாமக வீக்காகி விடும், எனவே இருவரும் ஒன்றுசேர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். தொடர்ந்து ராமதாசையும் சந்தித்து பேசினர். வழக்கம்போல் வியாழக்கிழமை (நேற்று) செய்தியாளர்கள் சந்திப்பின்போது ராமதாஸ் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என தகவல் பரவின.

இந்நிலையில் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்க அன்புமணி வருவதாக நேற்று காலை தகவல் பரவியது. அதன்படி ராமதாசை சந்திக்க சென்னை பனையூரில் இருந்து காரில் புறப்பட்ட அன்புமணி, காலை 9.10 மணிக்கு தனது இளைய மகள் சஞ்சுத்ராவுடன் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தார். ராமதாசுடன் அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தியபோது கட்சியின் சீனியர் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. இந்த பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே ராமதாசின் மூத்த மகள் காந்திமதி காலை 9.50 மணியளவில் தோட்டத்துக்கு வந்தார். இவர் வந்த 15 நிமிடங்களில் அன்புமணி பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு தோட்டத்தில் இருந்து இறுகிய முகத்துடன் வெளியேறிய காரில் புறப்பட்டு சென்றார்.

பாமக நிறுவனர் ராமதாசுடன் சந்திப்பின்போது என்ன நடந்தது என அன்புமணியிடம் செய்தியாளர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியபோது, கார் கண்ணாடியை கூட திறக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி அன்புமணி கிளம்பிச் சென்றார். இதனால் உள்ளே என்ன பேசினார்கள் என்பது குறித்து எந்த தகவலும் முழுமையாக கிடைக்கவில்லை. இந்த சந்திப்பின்போது தலைவர் பதவி, கட்சி நிர்வாகம், குடும்ப விவகாரம் உள்ளிட்டவற்றுக்கு 5 நிபந்தனைகளை ராமதாஸ் விதித்தார். இதற்கு அன்புமணி உடன்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அன்புமணி கார் தோட்டத்தை விட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதைதுரைசாமி ஆகியோர் ஒரே காரில் வந்து ராமதாசை சந்தித்து பேசினர். சுமார் 3 மணி நேரம் அவர்களது சந்திப்பு நடந்தது. அவர்கள், பாஜ கூட்டணி தமிழகத்தில் வலுவாக இருக்க வேண்டும் என்றால் பாமக தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கடந்த முறை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த நேரத்தில்தான் அன்புமணியை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கினார்.

தற்போது அவர் மதுரை வர உள்ள நிலையில், பாமகவில் தொடர்ந்து மோதல் இருந்தால், நன்றாக இருக்காது என்று அவர்கள் இருவரும் சமாதானம் பேசியுள்ளனர். ஆனால் ராமதாசோ இது எங்கள் குடும்ப விவகாரம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராமதாசை சமாதானப்படுத்தும் பாஜவின் முயற்சியும் பலனளிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து ராமதாசை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்று பாமக மற்றும் பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன.

* ராமதாசுடன் அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தியபோது கட்சியின் சீனியர் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
* பாமக நிறுவனர் ராமதாசுடன் சந்திப்பின்போது என்ன நடந்தது என அன்புமணியிடம் செய்தியாளர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியபோது, கார் கண்ணாடியை கூட திறக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி கிளம்பிச் சென்றார்.

* வெறிச்சோடிய தைலாபுரம்
தந்தை, மகன் இடையே நடக்கும் உச்சகட்ட மோதலால் கட்சி நிர்வாகிகள் கடும் விரக்தியடைந்துள்ளனர். இந்த பிரச்னையை எப்போது முடிப்பார்களோ? என்ற ஒருவிதமான சலிப்பு நிலைக்கு வந்துவிட்டதை காணமுடிந்தது. கட்சி நிர்வாகிகள் தினமும் பாமக நிறுவனரை சந்திப்பது வழக்கமானது. ஆனால் நேற்று வழக்கத்துக்கு மாறாக கட்சி நிர்வாகிகள் வருகை குறைவாக இருந்தது. வானூரில் இருந்து ஒன்றிரண்டு பேர் தோட்டத்துக்கு வந்திருந்தனர். ஆனால் அவர்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கட்சிக்காரர்களிடம் கேட்டபோது நேற்றே தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம் என்ற தகவலின் அடிப்படையில் யாரும் வரவில்லை என தெரிவித்தனர். மேலும் மோதல் காரணமாக வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என காலையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் தோட்டத்துக்கு முன்பாக குவிக்கப்பட்டனர். ஆனால் அன்புமணி வந்து சென்ற பிறகு போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.

* ராமதாஸ் விதித்த 5 நிபந்தனைகள்
ராமதாஸ்-அன்புமணி சந்திப்பு குறித்து ராமதாசின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, அடுத்த 6 மாதத்துக்கு கட்சியின் நிறுவனராகவும், தலைவராகவும் நானே இருப்பேன். கட்சியின் செயல் தலைவராக அன்புமணி நீடிப்பார். இளைஞர் அணி தலைவராக முகுந்தன் இருப்பார். சவுமியா கட்சிக்குள் வரக்கூடாது. 2 மகள்களுக்கும் பொதுவாக உள்ள சொத்துகள் மற்றும் பணத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று 5 நிபந்தனைகள் விதித்துள்ளார். அதேநேரத்தில், அன்புமணியோ தலைவராக தொடர்ந்து பாமகவில் பணியாற்றுவது குறித்தும், நிறுவனரின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவது, கூட்டணி நிலைப்பாடு குறித்து நிறுவனரின் ஆலோசனை படி தொடர்ந்து செயல்படுவது என உறுதியளித்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பாமகவில் நீடிக்கும் உட்கட்சி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாகவும் ராமதாசிடம் அவர் வலியுறுத்தியதாகவும். ஆனால் இதற்கு ராமதாஸ் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நான் சொன்னபடி 5 நிபந்தனைகளையும் அன்புமணி ஏற்றுக் கொண்டால்தான் சமரசம் என்று ராமதாஸ் திட்டவட்டமாக கூறிவிட்டார். அதேநேரத்தில் அன்புமணியும் தலைவர் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதனால் அவர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

* அன்புமணியை சந்திக்க ராமதாஸ் மறுப்பா?
தோட்டத்தில், அன்புமணி, ராமதாஸ் ஆகியோர் சந்தித்து பேசிக்கொண்டதாக தகவல் வெளியானாலும், அவர்கள் சந்தித்து கொள்ளவே இல்லை எனவும் கூறப்படுகிறது. அன்புமணி வருவது குறித்து ராமதாசுக்கு எந்த தகவலும் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும் காலையில் திடீரென வந்த அன்புமணியை சந்திக்க விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். நான் சொன்ன அனைத்து கோரிக்கைகளுக்கும் அன்புமணியிடம் சரி என்ற பதில் வந்தால் பார்க்கலாம் என்று அவர் ஆவேசமாக கூறியதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் தன்னுடைய அம்மா சரஸ்வதியிடம் நலம் விசாரித்தபடி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த அக்கா காந்திமதியிடம், தேர்தல் நேரத்தில் இவர் இப்படி நடந்து கொள்வது சரியா? எனக்கூறி ஆதங்கப்பட்டுள்ளார். அங்கிருந்த குடும்ப உறவினர்கள் அவரை அமைதிப்படுத்தி உள்ளனர். இதற்கு மேலும் காத்திருந்து சந்திக்க விரும்பாத அன்புமணி காலை 10.15 மணிக்கு கிளம்பி சென்றதாக தெரிகிறது.

* ராமதாஸ் கால புடிச்சுட்டு கிடக்கிறான் பாமகவில் பல குரூப்கள் உருவாக காரணம் துரோகி அன்பழகன்தான்: கட்சி பதவியை லட்சத்துக்கு விக்கிறான்; அன்புமணி வீடியோ வைரல்
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் முற்றியிருந்த நிலையில், செயல் தலைவரான அன்புமணி பனையூரில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிவுரை கூறியபடி உரையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், நீங்கள் எல்லோரும் ஆர்வமாக, ஒன்றாக சேர்ந்து கட்சிப் பணியை பண்ணனும். ஆனால் உங்களுக்குள்ள எல்லாம் இந்த குரூப், அந்த குரூப் என்றெல்லாம் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரே ஒரு நபர்தான். யாரு… அன்பழகன்தான்… (தலைமை நிலைய செயலாளர்) என்று அன்புமணி கூறுகிறார். அப்போது அங்கிருந்தவர்கள் கைதட்டுகின்றனர்.

பின்னர் தொடர்ந்து பேசும் அன்புமணி, அவரை எல்லாம் கட்சியைவிட்டு ஒதுக்கி இருக்கணும். 15 வருஷமாக கட்சியிலேயே இல்லை. கட்சியை விட்டு ஓடிப்போயிட்டாப்ல. திரும்பி வந்தாரு, ஆளை பிடிச்சு, கிடிச்சி போட்டு இந்த பொறுப்பு, அந்த பொறுப்புல வந்துக்கிட்டு இப்ப வித்துக்கிட்டு இருக்கிறாரு, என்னன்னு… மாவட்ட செயலாளர் ரூ.5 லட்சம் என்று வித்தாரு, அப்புறம் ரூ.3 லட்சத்துக்கு வந்துச்சு, பின்னர் 2 லட்சம், இன்று 1 லட்சம் என இப்படியெல்லாம் பேசி காசு சம்பாதிச்சுக் கிட்டு, கட்சியையும் இந்த சாதியையும் சமுதாயத்தையும் அழிச்சிக்கிட்டு இருக்கிறாரு.. இதையெல்லாம் நினைச்சு பாருங்க… உங்க எல்லாருக்கும் தெரியுது… இது ரொம்ப வருத்தமா இருக்கு. கட்சியின் துரோகி, சமுதாயத்தின் துரோகி. ஐயாவோட (ராமதாஸ்) கால புடிச்சிட்டு கிடக்கிறான். கட்சியோட துரோகி. கட்சி குடும்பம் எல்லாம் அப்படி பண்ணணும், இப்படி பண்ணணும் என, கூடவே ஒரு நபர் இருக்கிறார். வாத்தியார் இன்னொருத்தர் இருக்கிறார். எல்லோரும் அவரை பயன்படுத்தி வருகின்றனர்.

நான் அமைதியாக இருக்கிறேன். மனசில நிறைய இருக்கிறது, அமைதியாக இருக்கிறேன். பார்த்துக்கிடலாம், இருந்தாலும் தைரியமாக இருங்க. வேகமாக பண்ணுங்க… சரியா, எல்லோருக்கும் பொறுப்பு பதவி என நான் என்னென்ன பண்ணணுமோ அதையெல்லாம் பண்ணுவேன் என பேசி முடிக்கிறார். அங்கிருந்தவர்கள் எல்லோரும் கைதட்டுகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பாமகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே நேற்று அன்புமணி தைலாபுரம் வந்து ராமதாசை சந்தித்த நிலையில், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் தோட்டத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* பாஜவுக்காக ராமதாசுடன் பேச்சா? நயினார் விளக்கம்
கோவை விமான நிலையத்தில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: பாமகவில் நடக்கும் விவகாரம் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம். அதை பேசுவது அவ்வளவு நாகரிகமாக இருக்காது. தந்தை, மகனுக்கு இடையே இருக்கக்கூடிய சொந்த பிரச்னையை அவர்கள் பேசி தீர்க்க வேண்டும். குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் தனிப்பட்ட முறையில் ராமதாசை சந்திக்க சென்றிருக்கின்றனர். அதற்கும் பாஜவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அனைவரும் சமாதானமாக ஓரணியில் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். மதுரையில் வரும் 8ம் தேதி கால் பதிக்க வேண்டும் என்பதற்காகதான் அமித்ஷா வருகிறார். கால் மட்டும் அல்ல, வேரும் பதிக்கும். ஆலமரமாக முளைக்கும், பசுஞ்சோலையாக மாறும். கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு ஏற்கனவே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ராமதாசுடன் சகோதரர் திடீர் சந்திப்பு: பாமகவுடன் தவாக இணைப்பா? வேல்முருகன் பரபரப்பு பேட்டி
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் எனது சகோதரர் திருமால்வளவன் நேரில் சந்தித்தார். இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வந்தது. ஆனால், இந்த சந்திப்புக்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தற்போது ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு உள்ளது. அதில் ராமதாஸ் மனம் வருந்தி, செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டதை கண்ட என் கட்சி நிர்வாகிகள் மற்றும் நானும், எனது சகோதரர்களும் வருத்தம் அடைந்தோம்.

பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள சிறு குழப்பம் தீர்வதற்கு நாங்கள் மனதார விரும்புகிறோம். மன வருத்தத்தில் இருந்த ராமதாசை எனது சகோதரரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகியுமான திருமால்வளவன் நேரில் சந்தித்து, உங்களால் நாங்கள் வளர்க்கப்பட்டோம்… நாங்கள் இருக்கிறோம்… என ஆறுதல் தெரிவித்து வந்துள்ளார். இதுதான் சந்திப்பின் நோக்கம். அதேபோல் அன்புமணி தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனவே, வேல்முருகன் பாமகவில் சேருகிறார் என்றும், அன்புமணிக்கு எதிர்ப்பாக வேல்முருகன் ராமதாசுடன் பயணிக்க உள்ளார் என்பது போன்றும் சமூக வலைதளங்களில் உலா வரும் செய்திகள் உண்மைக்கு மாறானவை. வருகிற தகவல்கள் எல்லாம் கற்பனை ஆகும். தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாமகவுடன் இணையாது. அந்த பேச்சுக்கு வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* விஜய்க்கு எச்சரிக்கை
தவாக தலைவர் வேல்முருகன் அளித்த பேட்டியில், ‘வயதுக்கு வந்த பெண்கள் நடிகர் விஜய்க்கு முத்தம் கொடுப்பது பற்றி நான் சொன்ன கருத்துக்கு சில அரைகுறை வேக்காடுகள் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டுமென கூக்குரல் போடுவது எல்லாம் இங்கு வேண்டாம். இத்துடன் இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் சினிமா மோகம் ஆட்படுத்தி உள்ளது. மக்கள் கலையை கலையாக பார்க்க வேண்டும். நடிகரை நடிகராக பார்க்க வேண்டும். அவர்களது நடிப்பை பாராட்ட வேண்டும். சமூக வலைத் தளங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பற்றிய தேவையற்ற பேச்சுகள் வருவது நடிகர் விஜய்க்கு அழகல்ல. நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் மூலம் பேசி வருவது சரியல்ல என விஜய்க்கு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

* இருவரின் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சி: ராமதாசை தான் முன்நிறுத்துவோம்; – ஜி.கே.மணி
தைலாபுரம் தோட்டத்தில் நேற்று மாலை ராமதாஸை பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி சந்தித்து பேசினார். அதன்பிறகு வெளியே வந்த ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது: அன்புமணியை சந்தித்தது மனதிற்கு ஆறுதலாக இருந்தது என்று ராமதாஸ் தெரிவித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு எல்லாம் நல்லதே நடக்கும் என்று ராமதாஸ் தெரிவித்தது எங்களுக்கு பெரும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ராமதாஸின் கடுமையான உழைப்பு குறித்தும் பல்வேறு சாதனைகள் குறித்தும் குருமூர்த்தி 3 மணி நேரம் பேசியதாகவும் அது ஆறுதல் அளிப்பதாக இருந்தது என ராமதாஸ் கூறினார் என்றார். முன்னதாக ராமதாசை சந்திக்க செல்லும் முன் ஜி.கே.மணி கூறுகையில், ‘பாமகவில் ராமதாசின் செயல்பாடுகளை நீண்ட நாட்களாகவே மக்கள் பார்த்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்களை சந்தித்து இட ஒதுக்கீடு பெற்று தந்தவர். எனவே கட்சியில் ராமதாசை தான் முன்நிறுத்துவோம். அதேபோல் அன்புமணியின் சாதனைகளையும் விட்டு விட முடியாது’ என்றார்.

* வியாழக்கிழமை சஸ்பென்ஸ் ‘புஸ்’
பாமக நிறுவனர் ராமதாஸ் வராந்தோறும் வியாழக்கிழமைகளில் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பாமக குறித்த அதிரடி கருத்துக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதை சமீபத்தில்கூட பேட்டியின்போது ராமதாஸ் கூறியிருந்தார். அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகைளயும் கண்கலங்கியபடி வியாழக்கிழமை அன்றே வெளியிட்டார். நேற்று அன்புமணி நீக்கம் மற்றும் பொதுக்குழு கூட்டுவது குறித்து முக்கிய தகவல்களை வெளியிடுவேன் என்று ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று முக்கிய அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என்று பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ராமதாசை சந்திக்க அன்புமணி நேற்று திடீரென தைலாபுரம் வந்ததால் செய்தியாளர் சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் ராமதாஸ் நேற்று செய்தியாளர்கள் யாரையும் சந்திக்காமல் புறக்கணித்து விட்டார். இதனால் கட்சியினரும் ஏமாற்றம் அடைந்தனர். பாமக ஊடக பேரவையினர் கூட அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோரின் சந்திப்பின்போது அனுமதிக்கப்படவில்லை. அந்தளவு கதவுகள் மூடப்பட்டு ரகசியம் காக்கப்பட்டதால் கட்சியினரின் எதிர்பார்ப்புகள் புஸ்வாணம் ஆனது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi