திண்டிவனம்: பாமக பொதுக்குழுவில் தனிப்பெரும்பான்மையை உருவாக்கும் நடவடிக்கையில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தீவிரமாக இறங்கியுள்ளார். இதுதொடர்பாக முன்னணி நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை மாற்றியமைத்துள்ள நிலையில், இதுவரை செயலாளர்கள் நியமிக்கப்படாத 9 மாவட்டத்திற்கு புதிய செயலாளர்களை நேற்று அவர் நியமித்துள்ளார். பாமகவில் நிறுவனரான தந்தை ராமதாசுக்கும், செயல் தலைவரான மகன் அன்புமணிக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு நீடித்து வருகிறது.
அடுத்ததாக கூட்டுகின்ற பாமக பொதுக்குழுவின்போது தான் வெற்றி பெறுவதுடன் தனதுபக்கம் தனிப் பெரும்பான்மை உருவாக்கும் வகையில் இந்நடவடிக்கைகளில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறிவைத்து அங்குள்ள நிர்வாகிகள் பந்தாடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கட்சி முன்னணி நிர்வாகிகளுடன் நேற்றும் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து புதிய மாவட்ட செயலாளர்கள் நியமன பட்டியல் நேற்றும் வெளியானது.
அதன்படி இதுவரை காலியாக இருந்த மாவட்டங்களில் புதிய செயலாளர்களாக எஸ்டிகே சேகர் (திருவள்ளூர் வடக்கு), பகவான் பழனி (திருவள்ளூர் கிழக்கு), ரஜினி (திருவள்ளூர் தெற்கு), பழனிசாமி (தென்சென்னை தெற்கு), மயிலை ஆறுமுகம் (தென்சென்னை கிழக்கு), வி.எஸ்.வெங்கடேஷ் (வேலூர் கிழக்கு), முருகன் (மதுரை புறநகர் தெற்கு), பாண்டி காமாட்சி (எ) பாரதி பாண்டியன் (மதுரை புறநகர்), சந்தானதாஸ் (ராமநாதபுரம் கிழக்கு), சிங்கராயன் (தென்காசி தெற்கு), திருமலைசாமி (தென்காசி வடக்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் மாவட்ட தலைவர்களாக ரமேஷ் (திண்டுக்கல் கிழக்கு), ராஜாராம் (மதுரை புறநகர்), ஆதிகேசவன் (திருவள்ளூர் வடக்கு), மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளராக கணேசன், வன்னியர் சங்க மயிலாடுதுறை மாவட்ட தலைவராக அருண்குமார் ராமமூர்த்தி, வன்னியர் சங்க கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக ஜெயசீலன் ஆகியோரை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதுதவிர மதுரை மாவட்ட ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் அரங்காநல்லூர் பேரூர் செயலாளராக கிருஷ்ணர், அரங்காநல்லூர் ஒன்றிய செயலாளராக முருகன், மதுரை மேற்கு ஒன்றிய செயலாளராக ராஜகோபாலன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
* இதுவரை 27 மாவட்ட செயலாளர், 6 மாவட்ட தலைவர்கள் நியமனம்
இதுவரை விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், ஈரோடு, கடலூர், திண்டுக்கல், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 27 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 6 மாவட்ட தலைவர்களை ராமதாஸ் அதிரடியாக மாற்றியும், புதிதாக நியமித்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
* பாமக நிர்வாகிகளுக்கு வலை வீசும் பாஜ, தவெக
ராமதாஸ், அன்புமணி உச்சகட்ட மோதலை தொடர்ந்து, நிர்வாகிகள் மாற்றம், சேர்ப்பு அறிவிப்பால் பாமகவில் அனைத்து பிரிவிலான நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் சென்னை பனையூரில் நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி, தோட்டத்துக்கு வந்து ராமதாசை சந்திக்காமல் முரண்டு பிடித்து வருகிறார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் ராமதாசின் மூத்த மகள் காந்திமதி அவ்வப்போது தோட்டத்துக்கு வந்து ராமதாசை சந்தித்தும் பலனில்லை. அதேபோல் முகுந்தன் பரசுராமனும் ஒதுங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பாமக முன்னாள் தலைவர் தீரன், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி ஆகியோர் தோட்டத்துக்கு வந்து ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆகஸ்ட் 10ம்தேதி பூம்புகாரில் நடக்கும் மகளிர் மாநாட்டு குறித்து ஆலோசிக்க வந்ததாக சீனியர் தலைவர்கள் கூறிவந்தாலும் தந்தை, மகன் இடையிலான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. பின்னர் வெளியே வந்த ஜி.கே.மணி ெசய்தியாளர்களுக்கு பேட்டியளிக்காமல் விரக்தியுடன் கிளம்பிச் சென்றார்.
இதனிடையே ராமதாஸ், அன்புமணி மோதலால் பாமக நிர்வாகிகளில் சிலர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. அவர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளில் தேசிய, புதிய அரசியல் கட்சிகள் (பாஜ, தவெக) சார்பில் ரகசியமாக காய் நகர்த்தப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. தங்களது கட்சியில் சேர்ந்தால் கட்சிப் பதவியுடன், வரவுள்ள தேர்தலில் போட்டியிட சீட்டும், தேர்தல் செலவுக்கான சில உத்தரவாதமும் அளிப்பதாகவும், இந்த வலையில் பாமகவில் சில பிரிவுகளின் நிர்வாகிகள் சிக்கி உள்ளதாகவும், தந்தை, மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வராத நிலையில் அடுத்தடுத்த நாட்களில் பாமக பிரபலங்களில் சிலர் கட்சித் தாவலில் ஈடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.
* தனது நிலையில் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார்: அருள்மொழி பேட்டி
ராமதாசை நேற்று சந்தித்தபிறகு வெளியே வந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.த.அருள்மொழி கூறியதாவது: அமைப்பு தொடர்பாக பேசுவதற்காக வந்துள்ளேன். ராமதாஸ் கட்சித் தலைவர், அவர் அவருடைய வேலையை செய்கிறார். கட்சியில் ஒரு பிரச்னையும் இல்லை. ராமதாஸ் அவருடைய நிலையில் மிகவும் உறுதியாக உள்ளார். அன்புமணி வந்து ராமதாசை சந்திக்கலாம். தந்தையை, மகன் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். இருவருக்கும் இடையே தகராறு இருந்தால் மத்தியஸ்தம் செய்யலாம். தந்தைக்கும், மகனுக்கும் உள்ள பிரச்னையில் நாம் என்ன மத்தியஸ்தம் செய்ய முடியும். அன்புமணி செல்லப்பிள்ளை. அவர் வீட்டுக்கு அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம். மகளிர் சங்க மாநாட்டுக்கு நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம். வன்னியர் சங்கத்தில் 120 நிர்வாகிகள் உள்ளனர். யார் யார் சரியில்லையோ அவர்கள் நீக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* ‘இனி இங்கேதான் இருப்பேன்’ வடிவேல் ராவணன் பல்டி
ராமதாசின் தொடர் அதிரடி நடவடிக்கைகளால் அன்புமணி பக்கம் சாய்ந்திருந்த சில முன்னணி நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்தில் தஞ்சமடையும் நிலை உருவாகி உள்ளது. ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் சில நாட்கள் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளரான வடிவேல் ராவணன் திடீரென சென்னை பனையூரில் அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டார். இதனால் வடிவேல் ராவணன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பரபரப்பாக பேசப்பட்டது. இதனிடையே நேற்று அவர் 10க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தார். அப்போது இதற்குமேல் நான் இங்குதான் இருப்பேன் என நிருபர்களிடம் கூறிவிட்டு வேகமாக தோட்டத்துக்குள் ஓட்டம் பிடித்தார்.