திண்டிவனம்: பாமகவினர் யாரும் அன்புமணியை பற்றியோ அவரது செயல்பாடுகள் குறித்தோ அச்சப்படாமல் கட்சி வேலையை பாருங்கள் என தைலாபுரத்தில் நடந்த தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு ராமதாஸ் அட்வைஸ் செய்துள்ளார். பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் தலைவர் பதவி யாருக்கு என்பதிலும், கட்சியை வழிநடத்தப் போவது யார் என்பதிலும் அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. தந்தை, மகன் இருவரும் நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்குவதுமாக தொடர் நடவடிக்கைகளை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், அன்புமணியை வெளிப்படையாக விமர்சித்த பிறகு இந்த மோதல் மேலும் பூதாகரமாகி சட்டமன்ற கொறடாவை மாற்ற மனு கொடுக்கும் வரை சென்று கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளது.
இந்நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று திடீரென பாமகவின் தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தை ராமதாஸ் கூட்டினார். இக்கூட்டத்தில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே மணி, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், தென் மண்டல பொறுப்பாளர் பரந்தாமன், கரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கர், கவிஞர் ஜெயபாஸ்கரன், மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொதுச்செயலாளர் ராம முத்துக்குமார், சமூக முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் சிவப்பிரகாசம், மாநில வன்னியர் சங்க செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், மாநில மகளிர் அணி தலைவர் வழக்கறிஞர் சுஜாதா, முன்னாள் நீதிபதி அருள், முன்னாள் எம்பி துரை, இணை பொதுச் செயலாளர் அருள் எம்எல்ஏ, முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் ஏகே மூர்த்தி, ஆடுதுறை பேரூராட்சி பெருந்தலைவர் ம.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் தொடக்கத்திலேயே அன்புமணியை மிகக் கடுமையாக விமர்சித்து ராமதாஸ் பேசி உள்ளார். அப்போது சில நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமதாசை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும் ராமதாஸ் அன்புமணி குறித்து தொடர்ந்து பேசியுள்ளார். ‘அன்புமணியின் செயல்பாடுகள் குறித்து கட்சியினர் யாரும் அச்சப்பட தேவையில்லை. கட்சியை நான் தொடர்ந்து வழி நடத்துவேன். நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் செய்யுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள். இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. கிராமங்கள் தோறும் சென்று கட்சியை வலுப்படுத்துங்கள். திண்ணை பிரசாரம் செய்யுங்கள். பூம்புகார் மாநாட்டு பணிகளில் கவனம் செலுத்துங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். எதை பற்றியும் கவலைப்படாதீர்கள்’ என ஆவேசமாக ராமதாஸ் பேசினாராம். பாமக நிர்வாகிகள் யாரும் அன்புமணி பற்றி சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பேசக்கூடாது என்றும் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
* திண்டிவனத்தில் 8ம் தேதி பாமக செயற்குழு கூட்டம்
தைலாபுரத்தில் தலைமை நிர்வாக குழு கூட்டம் முடிந்த பின் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி கூறியதாவது: பாமக தலைமை நிர்வாக குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் 19 பேரில் அன்புமணி பெயர் உள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட கூட்டத்திற்கு அவர் வரவில்லை. வருகின்ற 8ம்தேதி செவ்வாய்கிழமை திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் தனியார் மண்டபத்தில் பாமக செயற்குழு கூட்டம் கூடுகிறது. மாநாட்டு பணிகள் குறித்தும் அதற்கு மகளிர்களை அழைப்பது உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். வருகின்ற 10ம்தேதி அன்று ராமதாஸ் கும்பகோணம் வருகிறார். அன்று மாலை மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டம். அதனை தொடர்ந்து மாநாட்டு திடலை பார்வையிடுகிறார். இன்று நடைபெற்ற தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்து நின்று ராமதாசின் கரத்தை பலப்படுத்த வேண்டும் என்ற ஒற்றைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எங்களுக்குள் மோதல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
* இணைந்து செயல்படாவிட்டால் கட்சி சரிவை நோக்கி செல்லும் – ஜி.கே மணி வேதனை
தலைமை நிர்வாக குழு ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது: பாமக தமிழகத்தில் ஒரு வலிமையான கட்சியாக பேசப்பட்ட நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலால் நான் மனவேதனையில் உள்ளேன், கீழ்மட்ட தொண்டர்கள் வரையிலும் கட்சியில் எல்லோரும் குழம்பிப்போய் ரொம்ப வேதனையில் உள்ளனர். இதுமாற வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசை. இதற்கு ஒரே தீர்வு ராமதாசும், அன்புமணியும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசி தீர்வு காணவேண்டும். அப்போதுதான் தேர்தலை நோக்கி பாமக வீறு நடைபோட முடியும்.
பாமக கொறடாவை மாற்றுவதற்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது, நேற்றைக்கே மருத்துவர் ராமதாசும் ஒரு கடிதம் கொடுத்துள்ளார். கொறடா தொடர்பாக பெரிய அளவில் எந்த பிரச்னையும் வராது. ராமதாஸ் இல்லாமல் இந்த இயக்கமே இல்லை. அதனால்தான் அவர் வழியில் எல்லோரும் நடக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக ராமதாஸ் உள்ளார். அதேவேளையில் அன்புமணியை கட்சியில் நாங்கள் முன்னிலைப்படுத்தி இருக்கிறோம். அதனால் இந்த 2 சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே மீண்டும் கட்சி வலுப்பெறும். இல்லாவிடில் சரிவை நோக்கிதான் செல்லும், நலிவுதான் ஏற்படும். 2 பேரும் ஒன்றாக சேர்ந்தால் மட்டுமே தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* பாமக தலைமை நிர்வாகக் குழு கலைப்பு
பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவை கலைத்து புதிய குழுவை ராமதாஸ் நியமித்துள்ளார். அதன்படி ஏற்கனவே இருந்த பாமக தலைவர் அன்புமணி, திலகபாமா, வடிவேல் ராவணன், பாலு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட 19 பேர் இருந்த தலைமை நிர்வாகக் குழு கலைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக செயல்தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி, அருள், பரந்தாமன், தீரன், பு.தா.அருள்மொழி, சையது மன்சூர், முரளிசங்கர் உள்ளிட்ட 19 பேர் அடங்கிய புதுகுழுவை அவர் நியமித்தார். ராமதாசின் இந்த நடவடிக்கையின் மூலம் அன்புமணிக்கு புதிய நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாக குழுவில் அன்புமணி தவிர மற்ற அனைவரும் ராமதாஸ் ஆதரவாளர்கள். அன்புமணி ஆதரவாளர்களான திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன் ஆகியோர் நீக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
* வாழப்பாடி ராமமூர்த்தி மகன் திடீர் விசிட் ராமதாசை அடுத்தடுத்து சந்திக்கும் பழைய விசுவாசிகள்: அன்புமணி இல்லாமல் பாமகவை வழிநடத்த வலியுறுத்தல்
பாமகவில் தற்போது தந்தை, மகன் மோதல் முற்றிய நிலையில் கட்சி இரு பிளவாகிவிட்டது. இருவரும் இனி ஒன்று சேர மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அன்புமணி இல்லாத பாமகவை ராமதாஸ் தொடர்ந்து வழி நடத்துவார் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு தான் ராமதாசுடன் பழைய நட்பில் இருந்த தலைவர்கள் எல்லோரும் இப்போது அவரை நாடி வர துவங்கிவிட்டார்கள். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் சசோதரர் திருமால்வளவன், தமிழ்தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, கடந்த சில ஆண்டுகளாகவே கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கி இருந்த ராமதாசின் நண்பரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பொன்னுசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்து விட்டு சென்றார்கள்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் முன்னாள் தமிழக காங் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன் சந்தித்து பேசி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாவே பாமக மற்றும் ராமதாசை கடுமையாக விமர்சித்து வந்த ராமசுகந்தன் தற்போது ராமதாசை சந்தித்து பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அன்புமணியோடு ராமதாஸ் எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் ெதாடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்று வற்புறுத்துவதற்காகத்தான் என கூறுகிறார்கள். ராமசுகந்தனை தொடர்ந்து ராமதாசுடன் நெருக்கமாக இருந்த ஆரம்ப கால தலைவர்கள் ஒவ்வொருவராக அவரை சந்தித்து ஆதரவு கொடுப்பார்கள் என தெரிகிறது.
* பாமக கொறடாவை மாற்ற சபாநாயகரிடம் மனு: 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் ஆலோசனை; கட்சி சின்னத்துக்கு தேர்தல் ஆணையத்தில் முறையிட திட்டம்
பாமகவில் தற்போது 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, சேலம் அருள் ஆகியோர் ராமதாஸ் அணியில் உள்ளனர். மயிலம் சிவக்குமார், தர்மபுரி வெங்கடேஸ்வரன், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் அன்புமணி அணியில் உள்ளனர். இதற்கிடையே ராமதாசின் தீவிர ஆதரவாளரான சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருளுக்கு ராமதாஸ் கட்சியின் இணை பொதுச்செயலாளராக பதவி உயர்வு அளித்தார். இதன் பின் கடந்த சில நாட்களாக அருள் எம்எல்ஏ, அன்புமணியை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதுவரை எந்த நிர்வாகியும் அன்புமணி குறித்து வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைக்காத நிலையில் அருள், அன்புமணி மீது கடும் விமர்சனம் செய்தது அன்புமணி ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 2ம் தேதி அருள் எம்எல்ஏவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி அதிரடியாக நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் அன்புமணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம் ஆகியோர் நேற்று முன்தினம் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் பாமக எம்எல்ஏவான அருள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவரை பாமக சட்டமன்ற கொறடா பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மயிலம் சிவக்குமார் எம்எல்ஏவை கொறடாவாக நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் சபாநாயகரிடம் மனு அளித்து தனக்கு எதிராக செயல்படும் எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்த 3 எம்எல்ஏக்களின் கட்சி பதவியை பறித்த ராமதாஸ், எம்எல்ஏ பதவியை பறிக்க சபாநாயகரிடம் கடிதம் கொடுப்பது சம்பந்தமாக சட்ட வல்லுனர்களுடன் அவர் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் ஆணையத்தை உடனடியாக நாடி, கட்சி சின்னத்தை அன்புமணி தரப்பு உரிமைகோர முடியாதபடி தடுக்கும் நடவடிக்கை குறித்தும் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் அவர் தைலாபுரம் தோட்டத்தில் தொடர்ந்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.