கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், பறக்கும்படை தாசில்தார் ஜீப்பில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, ரேஷன் அரிசி கடத்தலுக்கு உதவிய ஜீப் டிரைவர் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல்காரரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த பி.சி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(59). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், கலெக்டரின் டிரைவராக பணியாற்றினார். அங்கிருந்து பணி மாறுதலாகி, கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் இளங்கோ பயன்படுத்திய ஜீப் டிரைவராக இருந்தார். இந்நிலையில், பறக்கும்படை தாசில்தார் இளங்கோ, தனது ஜீப்பில் தனக்கு தெரியாமல் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக, கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தாசில்தார் ஜீப்பில் பொருத்தியிருந்த ஜிபிஎஸ் கருவி, குருபரப்பள்ளி அடுத்த சென்னசந்திரம் அருகே நடுசாலை கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (33) என்பவரது செல்போன் எண்ணுடன் இணைப்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் தேவராஜை பிடித்து விசாரித்தனர். அவர் அரிசி கடத்தலுக்காக, தாசில்தார் ஜீப் டிரைவர் சுப்பிரமணியிடம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
பறக்கும்படை தாசில்தாரின் ஜீப்பில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தியதன் மூலம், ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக அவர் எந்தெந்த இடத்துக்கு ஆய்வுக்கு செல்கிறார் என்பதை அறிந்து மாற்றுப்பகுதியில் வேன் மற்றும் லாரிகளில் ரேஷன் அரிசியை கடத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஜிபிஎஸ் கருவி வாங்கிக் கொடுத்த தேவராஜ், அதை தாசில்தாரின் ஜீப்பில் பொருத்திய டிரைவர் சுப்பிரமணி ஆகியோரை, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் நேற்று கைது செய்தனர்.