ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் கடந்த ஆண்டு தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் தென்னரசு. இவர், பட்டா மாறுதலுக்கு சிவகங்கை மாவட்டம் அமராவதி புதூர் பகுதியை சேர்ந்த கருப்பையாவிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
அவரது வீட்டை சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ.45.73 லட்சம் மற்றும் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். இதில் தாசில்தார் தென்னரசு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது நேற்று புதிதாக சொத்து குவிப்பு வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.