*நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சங்கம் மனு
திருப்பூர் : தாராபுரம் அருகே மணல் கொள்ளை தொடர்பாக ஆய்வுக்கு சென்ற தாசில்தாரை மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு கொடுத்தனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கொடுத்த மனுவில்:
தாராபுரம் தாலுகா குண்டடம் பகுதி கத்தாங்கண்ணி பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் 3 ஏக்கர் அளவில் கிராவல் மண் வெட்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி அதிகாரிகளுடன் ஆய்வுக்கு சென்றார். அப்போது சட்டவிரோதமாக மண் அள்ளியது தொடர்பாக தாசில்தார் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பொக்லைன் உள்ளிட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் நில உரிமையாளர்கள் 5 பேர் தாசில்தாரை கடுமையான வார்த்தைகளால் பேசியும், கொலை மிரட்டல் விடுக்கவும் செய்துள்ளனர்.எனவே மணல் கொள்ளை கும்பல் மீதும், தாசில்தாரை மிரட்டிய கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தனர்.தேசிய புலிகள் கட்சியினர் கொடுத்த மனுவில்: திருப்பூர் மாநகராட்சி 4 வது வார்டில் ஜெயாநகர், ஜே.ஜே.நகர், பாரதிநகர், எழில்நகர்,எம்.ஜி.ஆர்.நகர்,நெருப்பெரிச்சல்,திருமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. பள்ளி மற்றும் கல்லுரி மாணவ,மாணவிகளின் வசதிக்காக போதுமான அளவு வசதி இல்லை. எனவே பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். என்றிருந்தனர்.
ஈட்டி வீரம்பாளையம் அறிவொளி நகர் செல்வமுத்துக்குமாரசுவாமி கோவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கொடுத்த மனுவில்: எங்களது பகுதியில் உள்ள செல்வமுத்துக்குமாரசுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை உள்ளிட்ட நாட்களில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் எங்களது பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் சிலர் கோவிலை சுற்றி போடப்பட்டுள்ள கம்பி வேலியின் கல் கால்களை உடைத்து அத்துமீறி கோவிலுக்குள் நுழைந்தும் குடிசைகள் அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தனர்.
பல்லடம் மற்றும் திருப்பூர் கிளை அரசு பஸ் டிரைவர்கள்,கண்டக்டர்கள் கொடுத்த மனுவில்: திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் தனியார் மினி பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதுபோல் அதிவேகமாக பஸ்களை இயக்குகிறார்கள்.முறையற்ற முறையில் ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி வருகிறார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.எனவே மினி பஸ்களை பஸ் நிலையத்திற்கு வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தனர்.
செம்பியநல்லுர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில்:எங்களது பகுதியில் பொது வழித்தடத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.ஆக்கிரமிப்பால் பல்வேறு சிரமங்களையும் சந்தித்து வருகிறோம். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தனர்.
குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் எங்களது பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். வீடு இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தனர்.