டரூபா: தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் டி20யில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வி அடைந்திருந்த நிலையில் 2வது டி20 போட்டி டரூபா மைதானத்தில் இன்று அதிகாலை நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் ஓப்பனர்களாக களமிறங்கிய அத்தனேஸ் மற்றும் ஷாய் ஹோப் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். வில்லியம்ஸ் பந்துவீச்சில் அத்தனேஸ் ஆட்டமிழக்க, 22 பந்தில் 41 ரன்கள் சேர்த்த ஹோப், க்ரூஜர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பூரன் இந்த போட்டியில் 19 ரன்களுக்கு நடையை கட்டினார்.
கேப்டன் பவல் அசுர வேகத்தில் ரன்கள் சேர்க்க, கடைசி கட்டத்தில் ரூதர்போர்டும் அதிரடி காட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 179 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் வில்லியம்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.அதன் பிறகு 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் ஹென்ட்ரிக்ஸ் 18 பந்தில் 44 ரன்கள் சேர்த்து அதிரடி துவக்கம் தந்தார். ஹென்ட்ரிக்ஸ் ஷெப்பர்ட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென் ஆப்பிரிக்கா அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஷெமார் ஜோசப் மற்றும் ஷெப்பர்ட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ருமாரியோ ஷெப்பர்ட் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.