கேப் டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுவரை உலகக் கோப்பை வெல்லாத தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி, வெற்றிக்கு மிக அருகே வந்த பின் தோல்வி அடைந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இறுதிப்போட்டி முடிவு குறித்து பலர் தங்களிடம் பேசி அதை மீண்டும் நினைவுபடுத்துவதாக அந்த அணி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ”டி20 உலகக் கோப்பை இறுதி போட்டி முடிவை பற்றி நாம் எப்போது நினைக்க வேண்டாம் என்று நினைக்கிறோமோ, அப்போது அதைப்பற்றி பேசுகிறார்கள்.
என்னால் முடிந்தவரை அதை மறப்பதற்கு நினைக்கிறேன். ஆனால், அது அத்தனை எளிதாக இல்லை. ஒரு நாள் இரவு, யாரோ ஒருவர் அதைப் பற்றி என்னிடம் பேசினார். நீங்கள் எங்களுக்காக வருத்தம் அடைந்தால், அதை எங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது போல இருந்தது. சில விஷயங்களை நாம் நினைத்துப் பார்க்காமல் இருக்கவே விரும்புவோம்” என்றார்.