சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழக தலைவர், அதன் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் இரண்டு யானை சின்னம், ஒரு வட்ட வடிவில் வாகை பூ கொண்ட கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், யானை சின்னத்தை அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த அங்கீரிக்கப்பட்ட, அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் யாரும் எந்த வடிவிலும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் உத்தரவு உள்ளது.
இதுதொடர்பாக எங்களுடைய கட்சியின் மத்திய தலைமை அந்த கட்சியினுடைய தலைமையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும்படி கூறியது. அதன் அடிப்படையில் அவர்களது மேலாளர் வெங்கட்டை தொடர்பு கொண்டோம். இது சம்பந்தமாக சட்ட விளக்கங்களை அனுப்பியுள்ளோம். இது சம்பந்தமாக அவர்கள் பரிசீலித்து முடிவு எடுப்பதாக கூறியுள்ளனர். கட்சிகளுக்குள் முரண்பட்ட கருத்து வந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய தலைமை நேரடியாக அவர்களுக்கு தகவல்களை தெரிவித்து சட்ட நகல்களை வழங்குமாறு கூறியிருக்கிறார்கள். அதன்படி வழங்கியிருக்கிறோம். அவர்கள் நல்ல முடிவாக எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.