திருவள்ளூர்: தி.நகர் ரங்கநாதன் தெருவில் துணி எடுக்க வந்த சிறுமியிடம் ரூ.15 ஆயிரத்தை திருடிய பிரபல கொள்ளைக்காரி ‘தில்’ சாந்தியை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் உஷாராணி(43). இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வந்தார். அப்போது உஷாராணி பணம் வைத்திருந்த பையை தனது மகளிடம் கொடுத்துவிட்டு துணிகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த பெண் ஒருவர், அரைமணி நேரமாக சிறுமியுடன் பேச்சு கொடுத்தப்படி பின் தொடர்ந்து, சிறுமியிடம் இருந்து ரூ.15 ஆயிரம் பணம் வைத்திருந்த பையை திருடிக்கொண்டு செல்ல முயன்றுள்ளார். இதை பார்த்த சிறுமி உடனே தாய் உஷாராணியிடம் கூறினார். அதன்படி உஷாராணி சத்தம் போட்டு கடைக்கு வந்த பொதுமக்கள் உதவியுடன் பையை திருடிய பெண்ணை பிடித்தனர். பிறகு மாம்பலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்படி விரைந்து வந்த போலீசார் பிடிபட்ட பெண்ணை பிடித்து விசாரணை நடத்திய போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம் மற்றும் நகைகளை திருடும் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளைக்காரியான சாந்தி (எ) தில்சாந்தி என தெரியவந்தது. இவர் மீது மாம்பலம், பாண்டி பஜார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தில் சாந்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் வைத்திருந்த பையை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.