சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வெறும் 10 ஆயிரம் கன அடிதான். இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில், ஆற்றங்கரை ஓரம் உள்ள பாசனப் பரப்புகள் மற்றும் தண்ணீர் திறந்துவிடப்பட்ட கால்வாய்களின் ஓரங்களில் உள்ள பாசனப் பரப்புகள் தவிர, மற்ற இடங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் – 54.91 அடி (120 அடி). நீர் இருப்பு 20.55 டி.எம்.சி. (மொத்த இருப்பு 93.47 டி.எம்.சி.). நீர்வரத்து சுமார் 12,000 கன அடி. தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கன அடி.
குறுவை சாகுபடிக்கே தண்ணீர் பற்றாத நிலையில், சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்று இதுவரை அரசு கூறவில்லை. இன்றுவரை சம்பா சாகுபடி குறித்தும், போதிய விதை நெல் மற்றும் உரங்கள் விநியோகம் குறித்தும் எந்தவிதமான அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. எனவே, அதிமுக அரசு வறட்சி காலத்தில் செய்ததுபோல், சம்பா சாகுபடி மேற்கொள்ளும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சம்பா மற்றும் தாளடி தொகுப்பு திட்டத்தை அறிவித்து தேவையான உதவிகளை செய்திட வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காக்க போராட்டம் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.