சென்னை: தன்னாட்சி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை தேர்வு நடத்தி சோதனை செய்ய அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைவு பெற்று இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் தற்பொழுது 116 கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற்று செயல்படுகிறது. நடப்பாண்டில் 10க்கும் மேற்பட்டக் கல்லூரிகள் தன்னாட்சிக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றன. தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பட்டங்களை அண்ணா பல்கலைக் கழகம்தான் வழங்குகிறது. ஆனால் அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகளை பல்கலைக்கழகம் நடத்தாது. அந்தந்தக் கல்லூரிகளில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
தன்னாட்சிக் கல்லூரியில் இருந்து பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கு கிரேடு வழங்கி பட்டப்படிப்பிற்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டச் சான்றிதழை பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்நிலையில், தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரியிலும் தரமான கல்வி வழங்கும் வகையில் தேர்வில் மாற்றம் செய்ய ஜூலை 29ம் தேதி நடத்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானமாக, தன்னாட்சி கல்லூரிகளில் வழங்கப்படும் அனைத்து பாடப்பிரிவிற்கும், அனைத்து செமஸ்டரிலும், ஒரு பாடத்தை பல்கலைக்கழகமே தயாரித்து, அதற்கான வினாத்தாள் தயாரித்து, தேர்வுகளை நடத்தி, அதனை திருத்தம் செய்து மதிப்பெண்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனுடன் செமஸ்டர் தேர்வில் பிற பாடத்தில் பெற்ற மதிப்பெண்களுடன் ஒப்பிட்டு தரத்தை உறுதி செய்வதுடன், மதிப்பெண்களில் பெரும் வித்தியாசம் இருந்தால், அது குறித்து விசாரிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தரவரிசை பட்டியலில் 200 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு முறை செயல்படுத்தப்படாது என சிண்டிகேட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தகுதியற்ற கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதில் உள்ள தரச்சிக்கல்கள் குறித்து பல்கலைக் கழக மானியக்குழுவிற்கு தெரிவிக்கப்படுமெனவும், தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் தரத்தை உறுதிசெய்யவும், இணைப்புச் சட்டங்களில் பொருத்தமான திருத்தங்களைச் செய்யவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தரவரிசை பட்டியலில் 200 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு முறை செயல்படுத்தப்படாது.