கோவை: 385 முதலீட்டாளர்களிடம் ரூ.பல கோடி மோசடியில் ஈடுபட்ட பெருந்துறை சுசி ஈமு கோழி நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.7 கோடி அபராதம் விதித்து கோவை கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சுசி ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனம், ஆஸ்திரேலிய நாட்டு பறவையான ஈமு கோழியை வளர்த்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தது.
இதனை நம்பி தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல ஆயிரம் பேர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், உறுதியளித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப தராமல், பல கோடி ரூபாய் மோசடி செய்தது. இது தொடர்பாக, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நடந்து வருகின்றன. இதில், சேலத்தில் 385 பேரிடம் பணம் பெற்று கொண்டு மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கு, கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில், சுசி ஈமு கோழி நிறுவன உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அபராதமாக ரூ.7 கோடியே 89 லட்சம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையினை மேல் முறையீட்டு காலம் முடிந்த பின்னர் 385 முதலீட்டாளர்களுக்கும் பகிர்ந்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், 4 வழக்குகளில் சுசி ஈமு நிறுவன அதிபர் குருசாமிக்கு ஏற்கனவே சிறை தண்டனை மற்றும் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.