மீனம்பாக்கம்: துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த 2 பயணிகள் சென்னையில் இறங்காமல், பெங்களூருக்கு தப்பி சென்றனர். அவர்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பெங்களூருக்கு சென்று சோதனையிட்டனர். இதில், 2 கடத்தல் பயணிகள் மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 6 பேரிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர். அவர்களிடம் இருந்து 7.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து சென்னைக்கு விமானங்கள் மூலமாக தங்கம் கடத்தி வரப்படுவதாக நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ஒரு பயணி மற்றும் அபுதாபியில் இருந்து சென்னை வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்த பயணி டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, நேரடியாக பெங்களூருக்கு டிக்கெட்டுகள் மாற்றப்பட்ட விவரங்கள் தெரியவந்தது.
எனினும், அந்த பயணிகளும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், ஏன் சென்னைக்கு வராமல் பெங்களூருக்கு டிக்கெட்டை மாற்றியுள்ளனர் என அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரகசியமாக விசாரித்தனர். இருவரும் தங்கம் கடத்தி வருவதை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மோப்பம் பிடித்து, அவற்றை கைப்பற்ற காத்திருக்கின்றனர் என்பதும், அதனால் டிக்கெட்டை பெங்களூருக்கு மாற்றி செல்வதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து, சென்னை மத்திய புலனாய்வு துறையின் தனிப்படையினர், அன்றிரவே மற்றொரு விமானத்தில் பெங்களூரில் தங்கம் கடத்தி வரும் 2 பயணிகளை விரட்டி பிடிக்க சென்றனர். அங்கு நேற்று அதிகாலை துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து பெங்களூர் வந்திறங்கிய 2 தனியார் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சென்னையை சேர்த்த 2 கடத்தல் பயணிகளையும் மடக்கி பிடித்தனர். இருவரையும் தனியறைக்கு கொண்டு சென்று முழுமையாக பரிசோதித்தனர். இதில், அவர்களின் உள்ளாடைகள் மற்றும் காலில் கட்டு போட்டிருந்த பாண்டேஜில் மறைத்து கடத்தி வந்த 7.5 கிலோ தங்க பசையை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹5.2 கோடியாகும்.
இருவரையும் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் துபாய், அபுதாபியில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள். அவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்புவதை சர்வதேச அளவில் தங்கம் கடத்தும் கும்பல் மோப்பம் பிடித்து, அவர்களிடம் நைசாக பேசி, இருவரையும் தங்கம் கடத்தும் குருவிகளாக மாற்றியுள்ளனர். இதற்காக முதல் வகுப்பு டிக்கெட்டுகளை கடத்தல் கும்பல் பதிவு செய்து கொடுத்துள்ளது.
பின்னர் இருவரும் பெங்களூரில் இறங்கி ஓய்வெடுக்க, விமான நிலையம் அருகிலேயே ஒரு நட்சத்திர ஓட்டலில் முன்பதிவு செய்துள்ளது. அங்கு 2 பயணிகளும் ஓய்வெடுக்கும்போது, அவர்களின் அறைக்கு சென்னையை சேர்ந்த தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்த 4 பேர் சென்று தங்கத்தை வாங்கிக் கொண்டு, சென்னைக்கு காரில் கொண்டு வருவதற்கு திட்டமிட்டிருந்ததாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் விசாரணையில் தகவல் தெரியவந்தது.
இதையடுத்து, பெங்களூர் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த, தங்கம் கடத்தும் கும்பலை 4 பேரை தனிப்படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதையடுத்து துபாய், அபுதாபியில் இருந்து சென்னைக்கு ₹5.2 கோடி மதிப்பிலான 7.5 கிலோ தங்கத்தை பசையாக கடத்தி வந்த 2 பயணிகள், தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 6 பேரை கைது செய்து, சென்னைக்கு கொண்டு வந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.