சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மாலை 5 மணி அளவில் லியோ திரைப்படம் விவகாரம் தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதாவிடம் மனு கொடுக்க, லியோ திரைப்பட வழக்கறிஞர் வேலு கார்த்திகேயன் தலைமையில் வக்கீல்கள் வந்தனர். உள்துறை செயலாளரிடம் மனு கொடுத்துவிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளிக்க வழக்கறிஞர் குழு வந்தனர். வழக்கறிஞர் ஒருவரின் சொகுசு காரை ஓட்டுனர் சுலைமான் (35), அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது, தலைமை செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர்கள் சரவணன் மற்றும் நிலா ஆகியோர் மொபட்டில், ராணுவ மைதானம் அருகே வந்தபோது, அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் திடீரென உடற்பயிற்சி கூட பயிற்சியாளர்கள் வந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில், சரவணன் காயங்கள் இன்றியும், நிலா கையில் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். ஆனால் இருவரும் வந்த மொபட் லியோ திரைப்பட வழக்கறிஞரின் சொகுசு காருக்கு அடியில் சிக்கி சேதமடைந்தது.
இதை நேரில் பார்த்த தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விபத்தில் காயமடைந்த பெண் பயிற்சியாளரை மீட்டு தலைமை செயலகத்தில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் சேதமடைந்த மொபட்டை மீட்டனர். பின்னர், விபத்து குறித்து சொகுசு காரை வேகமாக ஓட்டிய டிரைவர் சுலைமானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.