Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இஸ்ரேல் தலைநகரில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது புகை குண்டு வீசிய குற்றவாளி கைது: அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல்

நியூயார்க்: இஸ்ரேல் தலைநகரில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது புகை குண்டு வீசிய குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த நபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க - ஜெர்மன் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஜோசப் நியூமேயர் (28) என்பவர், இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரக கிளை அலுவலகத்தை ‘மோலோடோவ் காக்டெயில்’ (கையெறி புகை குண்டு) மூலம் தாக்கிவிட்டு தப்பினார். தலைமறைவான அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்டது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நியூயார்க்கின் கென்னடி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட நியூமேயர், கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேலுக்கு வந்தார். கடந்த 19ம் தேதி அமெரிக்க தூதரகத்திற்கு சென்று, அங்கிருந்த பாதுகாவலரை தாக்கிவிட்டு கையெறி புகை குண்டை வீசிவிட்டு தப்பினார். தற்போது நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது காவலில் உள்ளார். முதற்கட்ட விசாரணையில், அவரிடம் எத்தனால் நிரப்பப்பட்ட மூன்று புகை குண்டுகள் இருந்தன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஐந்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம். அமெரிக்க தூதரகத்தை தாக்குவது அவரது நோக்கமாக இருந்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் பின்னணியில், அமெரிக்க - இஸ்ரேல் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள பதற்றங்களை மேலும் வெளிப்படுத்தி உள்ளது. முன்னதாக நியூமேயர் வெளியிட்ட பதிவில், ‘டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை எரிக்கவுள்ளேன்; இதன்மூலம் அமெரிக்காவை வீழ்த்துவேன்’ என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்க டிரம்பை படுகொலை செய்ய அச்சுறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறினர்.