பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வரும் சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். சமீபகாலமாக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் அடிவயிற்று வலியால் (ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா) அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு ஜெர்மனியில் உள்ள மூனிச் நகரின் பிரபல மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இரு வாரங்களுக்குப் பின் இந்தியா திரும்பியுள்ள அவர் தற்போது நலமுடன் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ‘வலது கீழ் வயிற்றில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குணமடையும் பாதையில் இருக்கிறேன். களத்திற்கு திரும்ப காத்திருக்க முடியவில்லை’ என்றும் பதிவிட்டுள்ளார். அடுத்த 3 மாத காலத்திற்கு டி20 கிரிக்கெட் போட்டிகள் ஏதும் இல்லாததால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் 3 மாத காலம் ஓய்வெடுக்க உள்ளார்.