வாரணாசி: நீதிமன்ற உத்தரவின்படி இன்று வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொல்லியல் துறை சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியானது, இந்து கோயிலுக்கு உட்பட்டது என்று 5 பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தை இந்திய தொல்லியல்துறை அறிவியல் பூர்வ ஆய்வு நடத்த அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ஜூலை 26ம் தேதி வரை ஆய்வுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
மேலும், இவ்வழக்கு தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பிரிதிங்கர் திவாகர் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த ஆய்வு மேற்கொள்வதால், மசூதிக்கு சேதம் ஏற்படும் என்ற அன்சமன் மசூதி அமைப்பினரின் வாதத்தை உயர்நீதிமன்ற ஏற்றுக் கொள்ள மறுத்து தலைமை நீதிபதி, ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் எனக்கூறிய மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிசெய்தது.
இதற்கிடையே, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அன்சமன் மசூதி அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதி வளாகத்திற்கு இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) குழுவினர் வந்தனர். இரு தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மசூதி அமைப்பினர் இந்த ஆய்வை புறக்கணித்தனர். நீதிமன்ற உத்தரவின்படி ஞானவாபி மசூதி பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.