*பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை
நாகர்கோவில் : ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 150 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி தமிழ்நாட்டிலும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கலெக்டர், எஸ்.பி. ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்தனர். அதன்படி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதி, மாணவிகள் விடுதி கட்டிடங்கள், தீவிர சிகிச்சை பிரிவுகள், விரிவுரையாளர்கள் அரங்கம், நிர்வாக அலுவலக கட்டிடங்களுக்கு செல்லும் வழிப்பாதைகளில் மின் விளக்கு வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி முதற்கட்டமாக கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 150 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தன. தற்போது பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், கூடுதலாக 150 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
செவிலியர் விடுதிகள், டாக்டர்கள் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழிப்பாதைகளில் கேமராக்கள், மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள ஏ பிளாக், பி பிளாக் பகுதிகளிலும், பழைய கட்டிடங்களில் உள்ள சிகிச்சை பிரிவுகளுக்கான வழிப்பாதைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள், மாணவிகளின் விடுதிகளுக்கு செல்லும் வழிப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது பிரதான நுழைவு வாயில் வழியாக உள்ளே வந்தால் ஆங்காங்கே உள்ள பிற கட்டிடங்களுக்கு எளிதில் சென்று விட முடியும்.
இதை தடுக்கும் வகையில் மருத்துவக்கல்லூரியில் உள்ள மாணவர்கள் விடுதி, மாணவிகள் விடுதி மற்றும் நிர்வாக அலுவலகம், பிரேத பரிசோதனை கூடம் வழிப்பாதைகளில் புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது.
இரவு 8 மணிக்கு பின் நுழைவு வாயில் மூடப்படும். அதன் பின்னர் பிரதான வழியாக மட்டுமே உள்ளே வரவும், வெளியேறவும் முடியும். வேறு வழியாக செல்ல முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக டாக்டர்கள் கூறினர்.
மர்ம நபர் சிக்கவில்லை
சமீபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் விடுதியில் பெண் வேடமிட்டு வாலிபர் நுழைந்தார். கண்காணிப்பு கேமிராவில் முகம் தெரியாத வகையில் அந்த வாலிபர் உள்ளே வந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால் இதில் தொடர்பு உடைய நபர் இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை. விடுதிக்குள் நுழைந்து வெளியே செல்லும் வரை 2, 3 இடங்களில் உள்ள கேமராக்களில் மட்டுமே முகம் தெரியாத வகையில் அந்த வாலிபர் நடமாட்டம் உள்ளது.
மற்றப்படி கேமரா இல்லாத பகுதி வழியாகவே அந்த நபர் நுழைந்துள்ளார். எனவே, மருத்துவக்கல்லூரி பற்றி தெரிந்த நபராகவே அவர் இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. ஆனாலும் இன்னும் இதில் துப்பு துலங்க வில்லை.