பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து 37,263 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி, கடந்த வாரத்தில் 25ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர், மழை சற்று தணிந்ததால் நீர்திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளதால் பாதுகாப்பு கருதி, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று முன்தினம் 45ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு 80,000 கனஅடியாக அதிகரித்தது.
இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று 18ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 8மணி நிலவரப்படி 50,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 13,332 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 37,263 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கனஅடியில் இருந்து, 22,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து காரணமாக, அணையின் நீர்மட்டம் 113.05 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 82.81 டிஎம்சியாக உள்ளது. நீர் வரத்தும் திறப்பும், இதே நிலையில் இருந்தால், இரண்டு வாரத்திற்குள் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.