புழல்: ரெட்டேரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், குடியிருப்பு பகுதியில் சூழ்வதை தடுக்க, புழல் எம்ஜிஆர் நகர் பகுதியில் கால்வாய் அமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை நகரின் புறநகராக புழல் பேரூராட்சி இருந்தது. இதில், 18 வார்டுகள் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், சென்னை மாநகராட்சி வார்டு மறு சீரமைப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, தற்போது 23, 24வது வார்டுகளாக உள்ளன.
புழல் அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியில் ரெட்டேரி அமைந்துள்ளது. தற்போது, இந்த ஏரியை, சுற்றுலா தலமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளும் விரைந்து நடைபெற்று வருகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 32 மில்லியன் கனஅடி. இந்நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து அருகில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள ஒரே ஒரு கலங்களில் தண்ணீர் பெருகெடுத்து ஓடியது.
மேலும் தண்ணீர் அதிகரித்ததால் மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் புழல் அருகே உள்ள எம்ஜிஆர் நகர், அறிஞர் அண்ணா நகர், ராகவேந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தெருக்களில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதற்கு, இப்பகுதியில் நிரந்தர கால்வாய் இல்லாததே காரணமாக உள்ளது. இந்த பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரத்தின் கீழே பயன்படுத்தாத சுமார் 200 அடி நிலம் உள்ளது.
அந்த பகுதி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உத்தரவின்படி பயன்பாட்டுக்கு இல்லாத நிலமாகவே உள்ளது. குறிப்பாக, மழை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, இந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இதனால், வீடுகள் கட்டி குடியிருக்கும் மக்களை அகற்றாமல் இருக்க நீர்வளத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை நடக்க வேண்டும்.
இனிவரும் மழை காலங்களில் ரெட்டேரி முழு கொள்ளளவு நிரம்பி கலங்கள் வழியாகவும் மதகுகள் வழியாகவும் வெளியேறும் தண்ணீர் புதிதாக கட்டப்பட உள்ள கால்வாயில் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இதனால், அறிஞர் அண்ணா நகர் ராகவேந்திரா நகர் எம்ஜிஆர் நகர் ஆகிய நகர் பகுதிகளை சேர்ந்த மக்கள், பாதிப்படைவது தவிர்க்கப்படும். இதுகுறித்து அறிஞர் அண்ணாநகர், ராகவேந்திரா நகர் எம்ஜிஆர் நகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ஆண்டுதோறும் பருவமழை வரும் நேரங்களில் ரெட்டேரியில் தண்ணீர் நிரம்பி, நாங்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளமாக பெருகெடுத்து ஓடுகிறது.
இதனால் கொசு தொல்லை மட்டுமின்றி தண்ணீரில் கழிவுநீர் கலந்து பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அவல நிலையும் உள்ளது. எங்களுக்கு ஆண்டுதோறும், இது ஒரு பெரும் பிரச்சனையாகவே உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
குறிப்பாக, எம்ஜிஆர் நகர் அருகே அமைந்துள்ள கரையின் மதகு மற்றும் கலங்கள் பகுதிகளை மாற்றி, சுமார் 300 மீட்டர் தூரம் கரை அருகே புதிதாக மதகு மற்றும் கலங்கள் அமைக்க வேண்டும். ஏரிக்கரையின் எதிரே செல்லும் உயர் மின்னழுத்த கோபுரத்துக்கு கீழே அமைந்துள்ள நிலம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உத்தரவுப்படி பயன்பாட்டுக்கு இல்லாமல் உள்ளது. எனவே அந்த வழியாக மழைநீர் கால்வாய் அமைத்தால், தமிழக அரசுக்கு செலவும் குறையும்.
மேலும், அறிஞர் அண்ணா நகர், ராகவேந்திரா நகர் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக வசிக்கும் எங்களது வீடுகளை அகற்ற வேண்டிய கட்டாயம் இருக்காது. எனவே ரெட்டேரியின் உபரிநீரை வெளியேற்ற, உரிய கால்வாய்களை உயர் மின்னழுத்த கோபுரத்தின் கீழே உள்ள காலி நிலத்தின் வழியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
* தீவாக மாறும் மாதவரம்
புழல் ரெட்டேரியில், ஆண்டுதோறும் மழை காலங்களில் தண்ணீர் நிரம்பினால், வடபெரும்பாக்கம்-மாதவரம் நெடுஞ்சாலையில், செங்குன்றம் செல்லும் திசையில் தண்ணீர் வெள்ளமாக ஓடி, குளம்போல் தேங்கிவிடுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகளில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், மூலக்கடை, பெரம்பூர், சென்னை பாரிமுனை ஆகிய பகுதிகளுக்கு அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.
மேலும், மழைநீரால் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிடுவதால், மெகா பள்ளங்கள் உருவாகி, அதில் விழுந்து பலர் காயமடைகின்றனர். சிலருக்கு கை, கால் முறிவு ஏற்ட்டுள்ளது. இதனை தடுத்து நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.