இந்திய அறுவை சிகிச்சையின் தந்தை சுஷ்ருதர் காலம் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை அறுவை சிகிச்சை துறை பல்வேறு வளர்ச்சிகள் கண்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் இயன்முறை மருத்துவம் அவசியம் என்பது இன்றும் பலருக்கும் தெரியாத ஒன்று.உதாரணமாக, கால்களில் அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மாதங்கள் கடந்தும் சரியாக நடக்க முடியாமல், கீழே உட்கார முடியாமல் பலர் இருப்பார்கள்.
ஆகவே 90 சதவிகித அறுவை சிகிச்சைகளுக்கு இயன்முறை மருத்துவத்தின் பங்கு இன்றியமையாதது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அறுவை சிகிச்சை முடிந்த பின் ஏன் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், செய்யவில்லை எனில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தக் கட்டுரை.
அறுவை சிகிச்சை…
எந்த ஒரு இடத்தில் அறுவை சிகிச்சை செய்தாலும் அந்த இடத்தில் உள்ள சருமம், உள் சதை (Fascia), தசைகள் (Muscles) மற்றும் உள் உறுப்பு (அதாவது, எந்த பகுதி உறுப்பில் பிரச்சனையோ அதனை அறுவை சிகிச்சை மூலம் திறப்பது அல்லது அகற்றுவது, வேறு பொருட்களை அங்கு பொருத்துவது). இப்படி சருமம் முதல் உள் உறுப்பு வரை கிழித்து போதிய சிகிச்சை செய்ய வேண்டும்.இன்று லாப்ரோஸ்கோப்பி போன்ற பல தொழில்நுட்ப மாறுதல்கள் இருப்பினும் எல்லா வகையான அறுவை சிகிச்சைக்கு பின்பும் இயன்முறை மருத்துவம் அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக கை, கால்கள், கருப்பை, முதுகு தண்டுவடம் போன்ற இடங்களில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு போதிய கவனம் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இயன்முறை மருத்துவம்…
அறுவை சிகிச்சை முடிந்த பின் மீண்டும் முன்பு போல எல்லா வகையிலும் நாம் இயங்குவதற்கு இயன்முறை மருத்துவ பயிற்சிகள் உதவுகிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்தபின் மருத்துவமனையில் உள்ள இயன்முறை மருத்துவர், ஒருவரின் தசைத்திறன், தாங்கும் ஆற்றல் போன்றவற்றை பரிசோதனை செய்வார். பின்னர் அறுவை சிகிச்சைக்கு முன் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை பரிந்துரைத்து கற்றுக்கொடுப்பார்.
அதன்பிறகு, அறுவை சிகிச்சை முடிந்ததும் முதல் நாள் தொடங்கி முழுவதும் குணமடையும் வரை அடுத்தக்கட்ட உடற்பயிற்சிகளையும் தினமும் கற்றுக் கொடுப்பார்.
என்னென்ன உடற்பயிற்சிகள்…?
*தசை தளர்வு பயிற்சிகள்
அறுவை சிகிச்சை செய்யவிருக்கும் பகுதியை சுற்றியுள்ள தசைகள் இறுக்கமாக இல்லாமல் இருக்க தசை தளர்வு (stretching exercises) பயிற்சிகள் வழங்கப்படும்.
*தசை வலுப்பெற
ஒரு வாரத்திற்கு மேல் நாம் குறிப்பிட்ட தசைகளை பயன்படுத்தாமல் இருந்தால் அந்த தசைகள் பலவீனமாக ஆகும் என்பதால், அதற்கான தசை வலிமை (Strengthening Exercises) பயிற்சிகளை இயன்முறை மருத்துவர் பரிந்துரைத்து கற்றும் கொடுப்பர். உதாரணமாக, கால் மூட்டினில் அறுவை சிகிச்சை செய்தால் குறிப்பிட்ட மாதம் வரை தரையில் அமரக் கூடாது. ஆனால், அப்படியே அதுவரை தசைகளுக்கு ஓய்வு கொடுத்தால் அது பலவீனமாக மாறிவிடும் என்பதால் இவ்வகை பயிற்சிகள் செய்ய வேண்டும்.
*நடைப்பயிற்சி
கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் நடப்பது சிரமமாக இருக்கும். அதிலும் குறிப்பாக, கால்களில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்குப் பின் உடனே நாம் நடக்கக் கூடாது. அறுவை சிகிச்சை செய்த காலில் போதிய காலம் இடைவெளி விட்டுதான் நாம் ஊன்றி நடக்க வேண்டும் என்பதாலும், ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் இந்த நடைப்பயிற்சி காலம் மாறுபடும் என்பதாலும் முறையாக அதனை கற்றுத்தருவர்.
*பிற அறிவுரைகள்
அறுவை சிகிச்சை செய்தபின் எவ்வாறு படுக்கையில் இருந்து எழுவது, அமர்வது, எப்போது கீழே தரையில் அமர்வது, வீக்கம் மற்றும் வலி இருந்தால் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது, எவ்வளவு நாள் ஓய்வில் இருக்கவேண்டும், எவ்வகை வேலைகளை வீட்டில் தற்சமயம் செய்யலாம். விளையாட்டு வீரராக இருப்பின் எந்த மாதத்தில் முழுதாய் விளையாட தொடங்கலாம் என எல்லாவித அறிவுரைகளையும் வழங்குவர்.
ஏன் அறுவை சிகிச்சைக்கு முன்…?
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடற்பயிற்சிகள் செய்தாலே போதும், ஏன் அதற்கு முன்னரே செய்யவேண்டும் என சிலர் நினைக்கலாம். அறுவை சிகிச்சைக்கு முன்பே ஓர் அளவேனும் உடல் நிலையை தயார் நிலையில் வைத்தால்தான் எளிதில் பின்னர் மீண்டு வரலாம். மேலும் பல சிக்கல்களை தவிர்க்கலாம். இதனால் அவசர நிலையில் செய்யும் அறுவை சிகிச்சைகளை தவிர மற்றவர்கள் இயன்முறை மருத்துவரை அணுகி போதிய உடற்பயிற்சிகளை கற்றுக்கொள்ளுதல் அவசியம்.
இரண்டு கட்டப் பயிற்சிகள்…
அறுவை சிகிச்சை செய்தால் பிரச்னை முடிந்துவிடுகிறது, பின் ஏன் உடற்பயிற்சிகள் தனியாக செய்யவேண்டும் என பலருக்கும் தோன்றலாம். முதற்கட்ட உடற்பயிற்சிகள் படுக்கையில் இருந்து எழுந்து இயல்பாக நடக்க, அமர, தன் வேலைகளை தானே செய்துகொள்ள உதவும். இதனை மருத்துவமனையில் இருந்து வெளிவரும் வரை கற்றுக் கொடுப்பர்.
ஆனால், இரண்டாம் கட்ட உடற்பயிற்சிகள் நாம் வீட்டில் செய்வதற்காக பரிந்துரைத்து கற்றுக்கொடுப்பர். இது நம் தசை, மூட்டு என எல்லாம் வலுப்பெற்று மேலும் முழுதாக முன்பு போல் இயங்க உதவுகிறது. உதாரணமாக, கை தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்திருந்தால், நாம் முழுதாய் கைகளை தூக்கி வேலைகள் செய்ய, எடை கொண்ட பொருட்களை தூக்க, கை ஊன்றி செய்யும் வேலைகளை வலி இல்லாமல் முன்பு போல் செய்ய நாம் குறைந்தது மூன்று மாத காலம் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.அறுவை சிகிச்சை முடிந்தபின் மாதத்தில் ஒன்று அல்லது இரு முறை என தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இயன்முறை மருத்துவரை அணுகி தேவையான உடற்பயிற்சிகளை கற்றுக்கொண்டு வீட்டில் அதனை தொடர்வது அவசியம்.
அறியாமையால் விளையும் விளைவுகள்…
சமீபத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கால் ஜவ்வு கிழிந்து விட்டதால் அறுவை சிகிச்சை செய்து ஆறு மாதம் ஆகியும் இயல்பாய் நடக்க முடியாததால் என்னிடம் சிகிச்சைக்காக வந்திருந்தார். பரிசோதனை செய்ததில் அவரின் கால் மூட்டுகள் இறுக்கமாகவும், தசைகள் பலவீனமாகவும் இருந்தன. ஆறு மாதம் எந்த உடற்பயிற்சிகளும் செய்யாமல், மீண்டும் ஜவ்வு கிழிந்து விடுமோ என அஞ்சி அவர் வீட்டில் ஓய்வு எடுத்திருக்கிறார். பின் அவருக்கு போதிய விழிப்புணர்வும், உடற்பயிற்சிகளும் பரிந்துரைத்து கற்றுக்கொடுத்தேன். இப்போது அவரால் இயல்பாய் நடக்கவும், தரையில் அமரவும், படிக்கட்டுகளில் ஏறவும், அலுவலகத்திற்கு சென்றுவரவும் முடிகிறது.
கீழே அமர முடியாமல், சம்மணம் போட்டு அமர முடியாமல் போவது, அதிக எடைகொண்ட பொருட்களை தூக்க முடியாமல் இருப்பது, நேராக நடக்க முடியாமல் தாங்கித் தாங்கி நடப்பது, அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வலியுடன் இருப்பது, தசை பலவீனமாக இல்லாததால் மேலும் அதே இடத்தில் அடிபடுவது என விளைவுகள் பல வர நேரிடலாம். எனவே, போதிய விழிப்புணர்வு இல்லாமல் அறுவை சிகிச்சைக்குப் பின் உடற்பயிற்சிகள் செய்யாமல் இருந்தால், நம்மால் முன்பு போல இயங்க முடியாது என்பதனை நினைவில் கொண்டு சாமர்த்தியமாய் நடக்கவேண்டியது மிக அவசியம்.