திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் (நாளை) சனிக்கிழமை நடைபெறுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, கடந்த 13ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 4ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மதியம் மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகம் முடிந்து தீபாராதனையும், யாகசாலையில் மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தில் வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நாளை (18ம் தேதி) மாலை 4 மணியளவில் கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. இதனை காணவும், விரதமிருக்கவும் திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ள பக்தர்கள், கோயில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் கடைப்பிடித்து வருகின்றனர். இதனால் கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.