முருகப் பெருமான் சூரபத்மன் என்னும் அரக்கனை அழித்தார். இந்த சூரபத்மனை அழித்த நிகழ்வு தான் சூரசம்ஹாரம் என்று சொல்லப்படுகிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழா சூரசம்ஹாரம். இப்போது கந்த சஷ்டி அல்லது சூரசம்ஹாரத்தின் பின்னணியில் உள்ள புராண கதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
கந்த சஷ்டி திருவிழாவானது 6 நாட்கள் கொண்டாடப்படும். அதில் ஆறாம் நாளில் பக்தர்கள் கடுமையான விரதம் இருப்பார்கள். இந்த நாளில் மேற்கொள்ளும் விரதத்தை கந்த சஷ்டி விரதம் என்று அழைப்பார்கள். தென்னிந்தியாவில் பல்வேறு முருகன் கோவில்கள் உள்ளன.
கந்த சஷ்டி தினத்தன்று முருகன் கோவில்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதிலும் தென்னிந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான திருசெந்தூர் கோவிலில் சூரசம்ஹார கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடக்கும். சூரசம்ஹார தினத்தன்று இக்கோவியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இந்த சூரசம்ஹார நிகழ்வை கண்டுகளிப்பார்கள்.
சூரசம்ஹாரம், சூரபத்மன் என்னும் அரக்கனை தனது வேல் கொண்டு வதம் செய்த முருகனின் வெற்றியைப் போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் பற்றிய புராணக் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். புராணங்களின் படி, சூரபத்மன் என்னும் அசுரன் தேவர்களை சித்திரவதை செய்து வந்தான்.
இதிலிருந்து விடுபட தேவர்கள் பிரம்மரிடம் சென்று உதவி கேட்டனர். சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும் என்று பிரம்மர் கூற, தேவர்கள் கயிலாயம் சென்று சிவனிடம் உதவி கேட்டனர். இதனால் சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் முருகனை உருவாக்கினார். பின் திருச்செந்தூரில் முருகன் சூரபத்மனை போரிட்டு வென்று தேவர்களைக் காத்தார். மொத்தத்தில் இந்த அசுரனை அழிக்கவே முருகன் அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.