பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் முக்கண்ணா கட்டம்பாலே, தனது சகோதரருடன் நிலத்தைப் பிரித்து தனக்கு பங்கு வழங்குமாறு கடோலி கிராம பஞ்சாயத்தில் 1995ம் ஆண்டு விண்ணப்பம் செய்தார். அப்போதைய கிராம கணக்காளர் நாகேஷ் ஷிவங்சேகர் என்பவர் ரூ.500 லஞ்சம் கேட்டார். விவசாயி லட்சுமணன் இதுதொடர்பாக லோக்ஆயுக்தாவிடம் புகார் அளித்தார். பின்னர் லஞ்சம் வாங்கும்போது கணக்காளர் நாகேஷை லோக்ஆயுக்தா அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து அப்போதைய பெலகாவி மாவட்ட லோக்ஆயுக்தா துணை கண்காணிப்பாளர் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 2006ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி அன்று நாகேஷுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்தது.
சிறப்பு நீதிமன்றம் தனக்கு எதிராக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கிராம கணக்காளர் நாகேஷ் தார்வாட் உயர்நீதிமன்ற பெஞ்சில் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த தார்வாட் ஐகோர்ட் கிளை, நாகேஷை விடுவித்து 2012ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து லோக்ஆயுக்தா அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், பெலகாவி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய சிறைத்தண்டனை உத்தரவை உறுதி செய்து கடந்த 18ம் தேதி முக்கியமான தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து நாகேஷுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். 30 ஆண்டுகளுக்கு முன்பு லஞ்சம் வாங்கிய வழக்கில் கணக்காளர் நாகேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விவசாயி லட்சுமணன் கட்டம்பாலே அளித்த புகாரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தாமதமாக நீதி கிடைத்த நிலையில், விவசாயி லட்சுமணன் 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.