புதுடெல்லி: : நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நடந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளது. எனவே நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மறுதேர்வு நடத்தக் கோரியும் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கை கடந்த 18ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நீட் தேர்வின் புனிதத்தன்மையை பாதிக்கும் வகையிலான பெரிய அளவில் நடந்த முறைகேடுகள் குறித்த ஆதாரங்களை தந்தால் மட்டுமே மறுதேர்வுக்கு உத்தரவிட முடியும் என்று திட்டவட்டமாக கூறியது. மேலும், முறைகேடு நடந்ததாக கூறப்படும் குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில், மற்ற மையங்களை விட அதிகமான தேர்ச்சி விகிதத்தை கொண்டிருக்கிறதா என்பதை அறியும் வகையில் நாடு முழுவதும் நகரம், தேர்வு மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை நேற்று பிற்பகல் 12 மணிக்குள் வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.
அதன்படி, தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகள் நகரம் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் மாணவர்கள் பெயர்கள் இல்லாமல் மதிப்பெண் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து நீட் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் நாளைஇறுதி விசாரணை நடக்க உள்ளது.
அதன் அடிப்படையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
6 பேர் முழுமதிப்பெண் பெற்ற மையத்தில் அதிகபட்சம் 682 தான் அரியானாவில் ஜஜ்ஜாரில் உள்ள ஹர்தயாள் பப்ளிக்பள்ளி மையத்தில் 6 பேர் 720 மதிப்பெண் எடுத்து முழுமதிப்பெண் எடுத்து இருந்தனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மறுதேர்வு நடத்தப்பட்டதில் ஒருவர் மட்டும் 682 மதிப்பெண் பெற்றுள்ளார். மற்றவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளனர்.