புதுடெல்லி: நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் மயில்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார் அதில்,\\”மதுரை மாநகராட்சியின் 16வது வார்டு பகுதியில் உள்ள பகுதிகள் மறுவரையறை செய்வதற்கு முன்பாக வண்டியூர் குளம் மற்றும் நீர் பிடிப்பு பகுதி என வகைப்படுத்தப்பட்டு இருந்தது. பின்னர் அது அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மாட்டுத்தாவணி அருகில் சுமார் 9.56 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் டைடல் பார்க் அமைக்க அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ‘‘மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு இருந்த இடத்தில் தான், தற்போது டைடல் பார்க் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுஎனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து மயில்சாமி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘44வருடங்களுக்கு முன்பே நிலம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் இதை நீர் நிலை என எப்படி கருத முடியும். என்று தெரிவித்த நீதிபதிகள்,”மதுரை டைடல் பார்க் கட்டுமான நடைமுறைக்கு தடை கேட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, வழக்கை முடித்து வைத்தனர்.