மதுரை: சட்ட அலுவலர் நியமனத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்ற கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் உத்தரவை பின்பற்றி நியமனம் செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து, பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மானகிரியை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு சார்பாக ஆஜராகி வாதிடுவதற்காக சட்ட அலுவலர்கள் நியமிக்கப்படுவர். இதில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகள் விசாரிக்க தனித்தனியாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்காக தனி சட்ட விதிமுறைகள் உள்ளது.
குறிப்பாக 2017ம் ஆண்டு அரசு சட்ட அலுவலர் நியமனம் விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரசு தலைமை வழக்கறிஞர், பொதுத்துறை செயலர், சட்டத்துறை செயலர், உள்துறை செயலர் அடங்கிய குழுவை உருவாக்கி, அதன் மூலம் அரசு சட்ட அலுவலர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் தற்போது ஐகோர்ட் கிளையில் நியமனம் செய்யப்பட்டுள்ள சட்ட அலுவலர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். போதிய பயிற்சி, வாதாடும் திறமை இல்லாததால் வழக்குகள் தேக்கம் ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய சட்ட விதிகளை பின்பற்றி சட்ட அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும். புதிய விதிகளை பின்பற்றாமல் நடந்த நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சட்ட அலுவலர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றி தான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள், சட்ட அலுவலர் நியமனம் குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை பின்பற்றி சட்ட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்களா? என கேள்வி எழுப்பினர். பின்னர், மனுவிற்கு சட்டத்துறை செயலர், உள்துறை செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.