புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ். ஓஹா ஓய்வு பெற்றதையடுத்து நீதிபதி பி.வி.நாகரத்னா இன்று முதல் கொலீஜியத்தின் புதிய உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். கடந்த 1993ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கொலீஜியம் அமைப்பின்கீழ், உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய குழு, உச்ச நீதிமன்றம் மற்றும் 25 உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமித்தல், இடமாற்றம் செய்தல் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றை பரிந்துரை செய்கின்றன. அந்த பரிந்துரை அடிப்படையில் ஒன்றிய அரசு நீதிபதிகளை நியமித்து வருகிறது. கொலீஜியத்தில் இடம்பெற்றிருந்த அபய் எஸ். ஓஹா பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
இதையடுத்து தற்போது 5வது மூத்த நீதிபதியாக இருக்கும் பி.வி.நாகரத்னா இன்று முதல் கொலீஜியத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக பதவி வகித்த இ.எஸ்.வெங்கடராமைய்யாவின் மகளான பெங்களூரு வெங்கடராமைய்யா நாகரத்னா 2021 ஆகஸ்ட் 31ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் 2027ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ள பி.வி.நாகரத்னா, 36 நாள்கள் மட்டுமே அந்த பதவியில் நீடிப்பார். அதன்படி 2027 அக்டோபர் 29ம் தேதி ஓய்வு பெறுவார். இந்த சூழலில் இன்று முதல் ஓய்வு பெறும் வரை கொலீஜிய உறுப்பினராக நீடிப்பார்.