டெல்லி: பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்காததற்கு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2020ல் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் இருமாநில பிரச்னையை தீர்க்கும் விதமாக புதிய நடுவர் மன்றத்தை உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதனால் நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான இறுதி உத்தரவு வரும் வரை பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. இந்நிலையில் இன்று பெண்ணையாறு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு என்பதை ஒன்றிய அரசு ஏன் கருத்தில் கொள்ளவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பெண்ணையாறு விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு வாரத்தில் தனது நிலைப்பாட்டை பதில் மனுவாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தில் இத்தனை கால அவகாசம் கொடுத்தும் நடுவர்மன்றம் அமைக்காதது ஏன்?, இது இரு மாநிலங்களுக்கிடையேயான நீர் பங்கீடு என்பதை ஏன் ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளவில்லை? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.