சிவகங்கை: திருப்புவனத்தில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோயில் முன்பு நிறுத்தப்பட்ட காரில் வைத்திருந்த 10 சவரன் நகையை காணவில்லை என்று போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தினர். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் காவலாளி அஜித்குமாரை பிடித்துச் சென்று விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையின்போது, கோயில் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் வைத்து அடிக்கும்போது மயங்கிவிழுந்து விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தனிப்படை டிஎஸ்பி சண்முகசுந்தரமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆசிஸ் ராவத், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையைத் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தநிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். அஜித்குமாரின் படத்திற்கும் மலர்தூவி, 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் மடப்புரத்தைச் சார்ந்த தம்பி அஜித் குமார் படுகொலை ஆகி இருக்கிறார். கொடூரமான முறையிலே அவரை விசாரணை என்கிற பெயரில் சித்திரவதை செய்திருக்கிறார்கள். இதற்கு மிக வன்மையான கண்டனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவிக்கிறது. போலீஸ் விசாரணையில் இளைஞர் மரணம் அடைந்த விவகாரத்தில் FIR இல்லாமல் விசாரித்தது போலீசாரின் அத்துமீறல்.
FIR இல்லாமல் எப்படி வழக்குப்பதிவு செய்தார்கள்?. உச்சநீதிமன்றம் வகுத்துள்ள 11 விதிகளை விசாரணையில் காவல்துறை பின்பற்றுவதே இல்லை. அஜித் குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. காவல்துறையில் முரட்டுத்தனமான போக்கு நீடிப்பது வேதனை அளிக்கிறது. அரசு கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.