டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் உரிய பங்கை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரியில் தண்ணீரை பங்கிடுவது தொடர்பாக தம்ழிநாடு கர்நாடகா இடையே 50 ஆண்டுகளாக பிரச்னை தொடர்ந்து வருகிறது.
தண்ணீர் பங்கீடை சுமூகமாக்கவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையமும், அதற்கு துணையாக காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டன. காவிரி ஒழுங்காற்றுக் குழு ஒவ்வொரு முறையும் கூடி, தண்ணீர் திறப்பு தொடர்பாக பரிந்துரைகளை வழங்கும். இதில் எந்த மாநிலத்திற்காவது ஆட்சேபனை இருந்தால் காவிரி ஆணையம் கூடி உத்தரவுகள் பிறப்பிக்கும்.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 100வது கூட்டம் வீனித் குப்தா தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. கர்நாடகா, தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநில அதிகாரிகள் இதில் கலந்துக்கொண்டனர். 4 மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர்இருப்பு, நீர்வரத்து மற்றும் மழைப் பொழி அளவு குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வர வேண்டிய பாதியளவு தண்ணீர் வரவே இல்லை. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடியாக சரிந்தது. காவிரி டெல்டாவில் குறுவை, சம்பா சாகுபடிகள் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டும் கூட கர்நாடகா ஜூன் மாதம் வரை தமிழகத்திற்கான தண்ணீரை திறந்துவிட முரண்டு பிடித்தது.
இந்நிலையில் வரும் காலங்களிலும் உரிய காவிரி நீர் பங்கை தமிழகத்திற்கு வழங்க கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. ஜூன் முதல் தற்போது வரை கூடுதலாக 97 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று கர்நாடகா அரசு கூறியுள்ளது.