புதுடெல்லி: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் கமல், சிலம்பரசன் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் தக் லைப் திரைப்படம் வெளியானது. குறிப்பாக இத்திரைப்படத்தின் புரோமோஷன் விழா ஒன்றில் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையானது. இதன் காரணமாக கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் வெளியிடப்படவில்லை. மேலும் படத்தை திரையிட்டால் திரையரங்கங்கள் தீயிட்டு கொளுத்தப்படும் என்று சில கன்னட அமைப்புகள் பகிரங்கமாக எச்சரித்தனர்.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த தக் லைப் தமிழ் திரைப்படம் திரையிடுவதற்கான அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். அதேப்போன்று திரைபடம் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய வேண்டும் என்று மகேஷ் ரெட்டி என்பவர் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை கடந்த 13ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் கர்நாடகா அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் உஜ்ஜல்புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,\\” இதுதொடர்பான வழக்கின் விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும் இது மக்களின் உணர்வுபூர்வமானது என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,\\” இந்த விவகாரத்தில் சட்டத்தின் விதிகளை குண்டர்கள் கைப்பற்றுவதை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. ஒரு திரைப்படத்தை தயாரித்து அதனை வெளியிட யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உள்ளது. இருப்பினும் திரைப்படத்தை பார்த்த பின்னர் இருக்கும் விவரங்கள் மற்றும் கருத்துக்களை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா ஆகியவை குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
அதில் குறுக்கிட யாருக்கும் அதிகாரம் இல்லை. எனவே தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதை தடை செய்ய முடியாது. இதுதொடர்பாக அம்மாநில அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும். மேலும் திரைப்படத்தை எதன் அடிப்படையில் வெளியிட தடை விதிக்கப்பட்டது என்பதற்கான உரிய விளக்கத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு கர்நாடகா அரசு தெரிவிக்க வேண்டும். இதில் துப்பாக்கி முனையில் வைத்து முதலில் படத்தை வெளியிடுங்கள். அதன் பின்னர் பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம் என்று ஏனோ தானோ என்று கூற முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உரிய தணிக்கை சான்றிதழ் பெற்ற பின்னர் எந்த ஒரு திரைப்படத்தையும் வெளியிட தடை விதிக்க முடியாது. அரசு அதனையும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் ஒரு திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று இருந்தால் அதனை எந்த பிரச்சனையும் இல்லாமல் திரையிடுவதற்கான பாதுகாப்பை அம்மாநில அரசு கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக சட்டத்தின் படி அனைத்தும் நடைபெற வேண்டுமே தவிர சிலரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றார் போல் இருக்கக் கூடாது. அதனால் தக் லைப் திரைப்படத்தை திரையிடுவது, பாதுகாப்பு ஆகிய விவகாரம் தெரடர்பாக வரும் 19ம் தேதிக்குள் கர்நாடக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும்.அதேப்போன்று சிலர் பயமுறுத்துவதால் ஒரு திரைப்படம் வெளியிடாமல் இருப்பதையும் ஏற்க முடியாது.
சி.பி.எப்.சி சான்றிதழ் உள்ள ஒருபடத்தை திரையிடக் கூடாது என்று தெரிவிக்க முடியாது. ஒருவேலை படம் வெளியான பிறகு பொதுமக்கள் வேண்டுமானால் அதனை வந்து பார்க்காமல் இருக்கலாம். ஆனால் அதற்காக படத்தை தடை செய்வது என்பது ஏற்புடையது கிடையாது. இதில் குறிப்பாக தக் லைப் படத்தில் நடித்திருக்கும் நடிகரான கல்ஹாசனை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை கிடையாது. இதுபோன்ற நடவடிக்கையை கர்நாடகா உயர்நீதிமன்றம் எதன் அடிப்படையில் மேற்கொண்டது என்று கண்டனத்தோடு தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.