புதுடெல்லி: தேர்தல் பத்திர சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இரண்டாவது நாளாக நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘‘ஆளும் கட்சிக்கு அதிக பங்களிப்பு செல்வது வழக்கமாக இருக்கிறது. அதனை யார் என்று நாங்கள் யூகிக்க முடியாது. அது யாராக இருந்தாலும் பெறலாம் என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது’’ என தெரிவித்தார்.
இதையடுத்து அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘‘இதுபோன்று வரும் நன்கொடைகளை கணிசமான அதாவது அதிகமான பகுதியை ஆளும் கட்சி பெறுவது ஏன் வழக்கமாக உள்ளது?. மேலும் தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரத்தில் விகிதாசார வழிமுறைகளை ஒன்றிய அரசு பின்பற்றி உள்ளதா என்று கேள்வியெழுப்பியதோடு, தொகையை பங்களிப்பவர்கள் யார் என்பதை கூறவில்லை என்றாலும், அவர்கள் எவ்வளவு பங்களித்துள்ளார்கள் என்பதை கண்டிப்பாக காட்ட வேண்டும். இந்த திட்டம் வெளிப்படையாக இருக்கிறதா என்று தான் பார்க்கிறோம்’’ என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரனை மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.