டாக்கா: வங்கதேசத்தில் மாணவர்களின் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்ததால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த மாதம் வெடித்த மாணவர்களின் போராட்டம் காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் அசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. இதன் பின்னரும் வங்கதேசத்தில் போராட்டம் ஓய்ந்தபாடில்லை.
மாணவர்கள் நீதித்துறையை மறுசீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இனபாகுபாட்டுக்கு எதிரான மாணவர்கள் குழுவினர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மேல்முறையீட்டு பிரிவின் நீதிபதிகள் பிற்பகல் ஒரு மணிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனைத்து நீதிபதிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும் அதிபர் முகமது ஷஹாபுதினுடன் ஆலோசித்த பின்னர் மாலையில் ராஜினாமா செய்வதற்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் முடிவு செய்து இருந்தார். ஆனால் பிற்பகலில் நீதிமன்றத்தின் முன் திரண்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. மாணவர்களின் விதித்த காலக்கெடு முடிந்து, போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசின் சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ செய்தியில்,‘‘ நமது தலைமை நீதிபதி ராஜினாமா கடிதம் சட்ட அமைச்சகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த கடிதம் தாமதமின்றி அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும். தலைமை நீதிபதியின் ராஜினாமா கடிதம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்நிலையில், மேலும் 5 மூத்த நீதிபதி கள் ராஜினாமா செய்துள் ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
* சிறுபான்மையினர் மீது 205 தாக்குதல்கள்
கடந்த 5ம் தேதி பிரதமர் ஷேக் அசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பின்னர் 52 மாவட்டங்களில் சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் குறைந்தது 205 தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்து புத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் மற்றும் பூஜா உத்ஜபன் பரிஷத் ஆகியவை தாக்குதல் குறித்த தரவுகளை இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ள முகமது யூனுசிடம் வழங்கியுள்ளது.