புதுடெல்லி: நாடு முழுவதும் நீதிமன்ற விசாரணைகளில் அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய விரிவான வழிகாட்டுதல்களை வகுத்து தருவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அரசு உயர் அதிகாரிகள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தரப்பில், அரசு அதிகாரிகள் நீதிமன்ற விசாரணைகளில் ஆஜராவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு பரிந்துரைத்த வழிகாட்டு நெறிமுறைகளில் சிலவற்றை செயல்படுத்த முடியாத என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். உ.பி. அரசைச் சேர்ந்த 2 செயலாளர்களை கைது செய்ய வழிவகுத்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 2 உத்தரவுகளை ரத்து செய்த தலைமை நீதிபதி, அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்புவதில் விரிவான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றமே வகுப்பதாக அறிவித்தார்.
மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளில் அதிகாரிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் போதும் என்றும், அதே சமயம் அவமதிப்பு வழக்குகளில் சம்மந்தப்பட்ட அதிகாரி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டுமெனவும் தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.