டெல்லி : உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஒன்றிய அரசு அடுத்தகட்ட தேர்தல் பத்திர விற்பனையை இன்று முதல் தொடங்குவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தேர்தல் ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய பாஜக அரசால் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் குறிப்பிட்ட காலங்களில் விற்கப்படும் ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரையிலான தேர்தல் பத்திரங்களை பொது மக்கள், நிறுவனங்கள் வாங்கலாம். 15 நாட்கள் வரை செல்லுபடியாகும் இந்த பத்திரங்களை 1% வாக்கு வங்கி கொண்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்.
நன்கொடையாளர் யார் என்ற வெளிப்படைத்தன்மை இல்லாததால் இது சட்டவிரோத நிதி உதவியை எளிதாக்கும் என்றும் ஆளுங்கட்சிக்கு மட்டுமே சாதகமான திட்டம் எனவும் பல பாதகங்களை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடப்பாண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், கடந்த வெள்ளியன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
அதற்கு அடுத்த நாளே ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இன்று முதல் வரும் 20ம் தேதி வரை தேர்தல் பத்திரங்கள் விற்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபரில் தலா 10 நாட்கள் மற்றும் மக்களவை தேர்தல் நடக்கும் ஆண்டில் கூடுதலாக 30 நாட்கள் தேர்தல் பத்திரங்கள் விற்கலாம் என விதி இருந்தது. கடந்த ஆண்டு அதில் திருத்தம் செய்த ஒன்றிய அரசு சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் காலங்களில் கூடுதலாக 15 நாட்கள் தேர்தல் பத்திரங்கள் விற்கலாம் என்று உத்தரவிட்டு குஜராத், ஹிமாச்சல் தேர்தல் சமயத்தில் அதை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.