சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி இந்திய வனத்துறை அதிகாரி நாதன் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்குக்கூட ஏற்காமல் தள்ளுபடி செய்திருக்கிறது. வாச்சாத்தி மக்களுக்கு நிறைவு நீதி வழங்கும் வகையிலான உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலம் பல்லாண்டு காலத்தைக் கடத்தலாம், தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று முயன்றனர். ஆனால், தொடக்க நிலையிலேயே மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.எனவே, இனியும் தாமதிக்காமல் பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்கு தமிழக அரசு நீதி வழங்க வேண்டும். உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தவாறு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், அரசு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.