சென்னை: தனது மூர்க்க பிடிவாதத்தை காட்டி உச்சநீதிமன்றத்தையே அவமதிக்கப் போகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி? தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அரசமைப்பு சட்ட நெறிமுறை, மக்களாட்சி மாண்புகளை அவமதித்து வருகிறது. ஆட்சியை பொறுப்பில் அமர்த்திய வாக்காளர்களை வெகுவாக, வெளிப்படையாக ஒன்றிய பாஜக அரசு அவமதித்து வருகிறது. தவறான வழியில் ஆளுநர்களின் அரசமைப்புச் சட்ட விரோத செயல்பாடுகளை மறைமுகமாக ஊக்குவிப்பதாகவும் உள்ளது. தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட ஆளுநர் பட்டாங்கமாய் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக செயல்படுகிறார். தனது மூர்க்க பிடிவாதத்தை காட்டி உச்சநீதிமன்றத்தையே அவமதிக்கப் போகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?.
அரசு எல்லையற்ற பொறுமையை கடைபிடித்து, மோதல் போக்கால் ஆளுமை பாதிக்கப்பட கூடாது என பெருந்தன்மையை தமிழ்நாடு அரசு கடைசியாக உச்சநீதிமன்றம் சென்று நீதி கேட்க வழக்குப் போட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த பிறகே 10 மசோதாக்களை ஆளுநர் மீண்டும் வேறு வழியின்றி திருப்பி அனுப்பியுள்ளார். ஏன் இந்த தேவையற்ற அரசியல் கண்ணாமூச்சு? வாக்களித்த தமிழ்நாட்டு மக்களை வம்புக்கு இழுப்பதுதானே இதன் உட்பொருள்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 2024 பொதுத் தேர்தல்தான் ஒரே தீர்வு என்பதை வெகுமக்களுக்கு புரிய வைப்பதே முன்னுரிமைப் பணி என்று தி.க. தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.