புதுடெல்லி: இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் பறிக்கப்பட்ட எம்பி பதவி மீண்டும் வழங்குவது தொடர்பாக மக்களவை சபாநாயகர் இன்று அறிவிப்பு வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் 2 ஆண்டு தண்டனை விதித்தது. தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்திலேயே மக்களவையில் இருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராகுலின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து தீர்ப்பளித்தது.
இதனால் மீண்டும் ராகுலுக்கு எம்பி பதவி வழங்கப்பட வேண்டும். ஆனால் வார விடுமுறையை காரணம் காட்டி, தகுதி நீக்க உத்தரவை வாபஸ் பெறுவது இழுத்தடிக்கப்படுகிறது. ராகுல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் மக்களவை தலைமை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2 நாள் விடுமுறை முடிந்து நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூட உள்ளது. இதில், ராகுலின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா ரத்து செய்து அறிவிப்பு வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் இன்றிலிருந்தே ராகுல் மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை மற்றும் நாளை மறுதினம் என 2 நாட்கள் நடக்க உள்ளது. இதில் மணிப்பூர் நிலவரம் குறித்து முக்கிய விவாதம் நடைபெறும் சூழலில் நாடாளுமன்றத்தில் மீண்டும் ராகுலின் வருகை எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். அதே சமயம், ஆளும் பாஜவுக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தும். இதனால் ராகுல் அவைக்கு வராமல் தடுக்கவும் காய் நகர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே மணிப்பூர் விவகாரத்தில் ஆளும் பாஜ கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம், ராகுலின் வருகை என மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி வாரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி வரும் 10ம் தேதி பேச உள்ளார். அதைத் தொடர்ந்து, வரும் 11ம் தேதியுடன் மழைக்கால கூட்டத் தொடர் நிறைவடைய உள்ளது.
மாநிலங்களவையில் டெல்லி சேவைகள் மசோதா
டெல்லியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றுவது உள்ளிட்ட நிர்வாக முடிவுகளை எடுக்கும் அதிகாரம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் கடுமையான விவாதத்துடன் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றக் கூடாது என ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் திரட்டி உள்ளார். இந்த மசோதா மாநிலங்களவையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பலத்தை நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது. இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் வர உள்ளதால் நாளையே இந்த மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சிக்கும். இதை எதிர்க்கட்சிகள் தடுக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே டெல்லி சேவைகள் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதை தொடர்ந்து, இன்று மாநிலங்களவையில் காங்கிரசின் அனைத்து எம்பிக்களும் பங்கேற்க வேண்டுமென அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராகுலை பார்த்து ஒன்றிய அரசுக்கு பயம்
மும்பையில், சிவசேனா உத்தவ் அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘ராகுலின் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வேகம், உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவருக்கு மீண்டும் எம்பி பதவி வழங்குவதில் காட்டப்படவில்லை. இப்போதே 3 நாட்கள் கடந்து விட்டன. ஆனால் மக்களவை சபாநாயகர் இன்னும் ராகுலை பதவியில் அமர்த்தவில்லை. ராகுலை பார்த்து ஒன்றிய அரசு பயந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் எம்பி பதவியை தரவில்லை. இது குறித்து நாளை (இன்று) இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் ஒன்றிணைந்து ஆலோசிப்போம்’’ என்றார்.
நிறைவேறிய மசோதாக்கள்
* கடந்த மாதம் 20ம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து மக்களவையில் 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் 13 மசோதாக்கள் கடந்த 26ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட பிறகு நிறைவேற்றப்பட்டவை.
* மாநிலங்களவையில் இதுவரை 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 9 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* இவற்றில் முக்கியமான வன பாதுகாப்பு திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, உயிரியல் பன்முகத்தன்மை திருத்த மசோதா போன்ற குறுகிய விவாதத்துடன் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.