புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, ராகுலின் எம்பி பதவி மீண்டும் வழங்கப்பட வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், ராகுலின் பறிக்கப்பட்ட எம்பி பதவியை உடனடியாக வழங்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இது குறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று கூறியதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து வெள்ளிக்கிழமை பகல் 2.05 மணிக்கு மக்களவையில் ராகுலின் எம்பி பதவியை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டுமென வலியுறுத்தினேன். பின்னர் மக்களவை சபாநாயகரின் வீட்டிற்கு சென்று முறையிட்டேன். அன்று இரவும், அடுத்த நாள் காலையிலும் சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் அனைத்து ஆவணங்களையும் மக்களவை பொதுச் செயலாளரிடம் வழங்குமாறு கூறினார்.
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கடிதம் மூலமாக ஆவணங்களை அனுப்புமாறு அவை பொதுச் செயலாளர் கூறினார். அதன்படி ஆவணங்களை ஒப்படைத்து விட்டோம். ஆனால் எந்த ரசீதும் தரவில்லை. இந்த விஷயத்தில் யாரையும் குறை கூற விரும்பவில்லை. சபாநாயகர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். எனவே ராகுலின் பறிக்கப்பட்ட எம்பி பதவி, திங்கட்கிழமை அவை கூடுவதற்கு முன்பாக வழங்கப்படும் என நம்புகிறோம். எம்பி பதவி பறிக்கப்பட்டதை போலவே உடனடியாக திருப்பி தரப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பயப்படுகிறாரா மோடி?
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், ‘‘ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்த 26 மணி நேரத்தில் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 26 மணி நேரம் கடந்து விட்டது, இன்னும் எம்பி பதவி திருப்பித் தரப்படவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி பயப்படுகிறாரா? உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்ததன் மூலம், ராகுல் நாடாளுமன்றத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும்’’ என்றார்.