புதுடெல்லி: மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனை அடுத்து இந்தியா முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
இன்று நடைபற்ற வழக்கு விசாரணையில், பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் தாமதமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செயப்பட்டது. எஃப்.ஐ.ஆரில் ஆர்ஜி கர் மருத்துவமனையை சேர்க்காதது குறித்து காவல்துறைக்கு நீதிபதிகள் கேள்வியெழுப்பி அதிர்ப்தி தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனை அடுத்து, கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமான குறிப்புகளை உடனடியாக நீக்க சமூக வலைதளங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, இந்தியாவில் செயல்படும் சமூக ஊடக தளங்களை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்குமாறு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று கொல்கத்தா பயிற்சிப் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.