சென்னை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்டதால் பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. சென்னையை சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி மணிப்பூர் வன்முறை குறித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ப.கவியரசு அளித்த புகாரின் பேரில் பத்ரி சேஷாத்ரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 30-ம் தேதி அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் பெற்ற பத்ரி சேஷாத்ரி தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சிக்கும் வகையில் தாம் பேசவில்லை என்றும் நீதித்துறை மீது தாம் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் பத்ரி சேஷாத்ரி தரப்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.