‘‘டிரான்ஸ்பர்ல வெளியே போன ஆயுதப்படை அதிகாரி ஒருத்தர் தீராத மோகத்தால் மீண்டும் அதே இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்து, மீண்டும் வில்லங்கம் பண்றதா புகார் வந்திருக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் சிட்டி ஆயுதப்படையில் துணையான அதிகாரி கடந்த சில வருடங்களுக்கு முன்பு பணியாற்றிய போது வில்லங்கமான பல புகார்களில் சிக்கி டிரான்ஸ்பரில் வெளியே அனுப்பப்பட்டாராம்.. ஆனா மான்செஸ்டர் மாநகரத்தின் மீதான தீராத மோகம் மட்டும் அதிகாரிக்கு குறையலையாம்.. அதனால கடந்த சில மாதங்களுக்கு முன்னாடி மறுபடியும் மான்செஸ்டர்க்கே டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துவிட்டாராம்.. அதிகாரி திருந்தி இருப்பார்ன்னு பார்த்தா அதே புகார்கள் மறுபடியும் வரத் தொடங்கி இருக்காம்.. மகளிர் போலீசுக்கு முகாம் ஆபீஸ்களில் ேவலை கொடுக்க கூடாதுன்னு அரசு உத்தரவு இருக்கு..
ஆனா ஆயுதப்படை துணையானவர் தன்னோட முகாம் ஆபீஸில் பெண் போலீஸ்தான் நியமித்திருக்கிறாராம்.. அதோடு இல்லாம ஆயுதப்படை போலீஸ் பயிற்சி பள்ளியில் உள்ள கடைகளை தன்னோட உறவினர்களுக்கு உள்வாடகைக்கு கொடுத்து ஆதாயம் அடைவதோடு ஆயுதப்படையில் சாதி பாகுபாடு பார்க்கப்படுதுன்னு ஒரு பகீர் புகார் வெளியாகி இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி போலீஸ்காரர் பொறுப்பில் இருந்த நாட்களில் செய்த ‘சிறப்பான பணி’களை பட்டியல் எடுத்திருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரரின் அதிகார பல் பறிக்கப்பட்டதில் இருந்து ரொம்பவே அதிர்ச்சியில தான் இருக்காராம்.. நான் மட்டும் இப்போது தலைவராக இருந்திருந்தால் வானத்தை வில்லாக வளைத்திருப்பேன், சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நேரத்தில் அனைத்து கட்சிகளையும் கமலாலயம் முன்பு நிறுத்தியிருப்பேன்..
ஆனால் அந்த வாய்ப்பு போய்விட்டதே என சொல்லிக்கிட்டிருப்பதாக அவரது தீவிர அடிபொடிகள் சொல்றாங்களாம்.. அதே நேரத்தில் அவருக்கு பின்னாடி இருந்து கொடிகட்டி பறந்துக்கிட்டிருந்த நண்பர்களும் வெளியே வரமுடியாமல் தவிக்கிறாங்களாம்.. அவர் பேசுவதை கேட்டால் மீண்டும் கூட்டணிக்கு வேட்டு வைத்து விடுவாரோ என்ற எண்ணம் அக்கட்சியின் ரெண்டாங்கட்ட தலைவர்களுக்கு தோணுதாம்.. இதனால் மாஜி போலீஸ்காரர் பொறுப்பில் இருந்த நாட்களில் அவர் செய்த சிறப்பான பணிகளை பட்டியல் எடுத்திருக்காங்களாம்.. அதிலும் அவர் சேர்த்த சொத்து விவகாரமும் இடம்பெற்றிருக்காம்.. அதோடு நாடாளுமன்ற தேர்தலின்போது செய்த தேர்தல் செலவை டெல்லி மேலிடத்திற்கு இன்னும் கணக்கு காட்டலையாம்.. தேர்தலுக்கு மேலிடம் துட்டு கொடுத்த விவகாரமே நிர்வாகிகளுக்கு தெரியலையாம்..
அப்படியானால் டெல்லியில் இருந்து வந்த துட்டு முறையாக செலவு செய்யப்பட்டா, அவை எங்கே போச்சு என்ற கேள்வியையும் அதில் வச்சிருக்காங்களாம்.. அதை முக்கிய நிர்வாகிகளுக்கும் அனுப்பியிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. ஏதாவது ஒரு வழியில் உள்ளே புகுந்தே ஆகணும் என்ற முடிவில் இருக்காராம் மாஜி.. ஆனால் அவருக்கு இப்போதைக்கு எந்த பதவியும் கிடைக்காது என்றும், வடமாநிலங்களில் கட்சி வேலை செய்ய பொறுப்பாளராக போட்டு அனுப்பப்படுவார் என வந்த தகவலால் ரெண்டாங்கட்ட தலைவர்கள் ஹேப்பியாக இருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா. ‘‘தேனிக்காரர் கண்டுகொள்ளாததால் அப்செட்டில் இருக்கிறாராமே நிர்வாகி தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சின்ன மாவட்டத்தில் தேனிக்காரர் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் மாவட்டத்தின் தலைநகருக்கு வருவதே அரிதாக இருக்காம்.. எப்போதாவது ஒரு தடவை மாவட்டத்தின் தலைநகருக்கு வருவாராம்.. தற்போது, அதுவும் கிடையாதாம்.. தேனிக்காரரும் இவ்விஷயத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம்.. இதுகுறித்து அந்த முக்கிய நிர்வாகியை அழைத்து பேச முடியாத நிலையில், தேனிக்காரர் இருக்கிறாராம்.. எந்த ஒரு விஷயத்தையும் அவர் கண்டுகொள்வது கிடையாதாம்.. முக்கியமாக, குக்கர் கட்சியையும், இந்த முக்கிய நிர்வாகி கண்டுகொள்வது இல்லையாம்.. மாவட்டத்திற்கு ஒருவர் இருக்கிறார் என்பதுபோல் இருந்து வருகிறாராம்.. தேனிக்காரரும் இவரை கண்டு கொள்ளாததால் ரொம்பவே அப்செட்டில் இருந்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தனி ஆளாக செல்லும் பலாப்பழக்காரரின் நிலைமையை பார்த்து, எப்படி இருந்தவரு.. இப்படி ஆயிட்டாரே.. என இலைக்கட்சியினரே வேதனைப்படுகிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பலாப்பழக்காரரின் சொந்த மாவட்டமான ஹனீபீ மாவட்டத்தில் இலைக்கட்சியினர் சேலத்துக்காரரின் பிறந்த நாளை அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சிறப்பு பூஜைகள் என தடபுடலாக கொண்டாடினாங்களாம்.. அதே நாளில் பலாப்பழக்காரர் சொந்த ஊரான பிக்பாண்ட் நகரில் தான் இருந்திருக்கிறார்.. அன்றைய தினம் தனிப்பட்ட வேண்டுதல்களுக்காக, ஊரில் உள்ள கோயில்களுக்கு சைலண்டாக சென்று வந்துள்ளாராம்.. ஆதரவாளர்கள் யாரையும் அழைக்காமல், தனது குடும்பத்தினருடன் மட்டும் கோயில்களுக்கு சென்று வந்தாராம்.. கட்சியினரின்றி தனியாக சென்று வரும் நிலைமையை பார்த்து இலைக்கட்சியினரே, ‘எவ்வளவு செல்வாக்கோட இருந்தவர் உள்ளூர் கோயிலுக்கு செல்லும்போது கூட ஆதரவாளர்கள் இல்லாமல் தனியாக செல்கிறாரே… மலராத கட்சி கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்டவரை, அக்கட்சியின் மேலிடமும் தமிழக விசிட்டின்போது கண்டுகொள்ளவில்லை..
இப்படியே போனா என்னதான் செய்றது.. எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே..’ என வேதனைப்பட்டுள்ளனர்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘துறையில் எழுந்துள்ள முறைகேடு புகாரை கிளறும் வேலையை லஞ்ச ஒழிப்பு பிரிவு தொடங்கியிருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான துறையை கவனித்த புல்லட்சாமி ஆதரவு அமைச்சரவை பெண்மணி தூக்கி வீசப்பட்டார். மாற்றாக, ஒன்றிய அதிகார கட்சி குமாரரானவர் தற்போது அத்துறையை கவனித்து வருகிறாராம்.. தம்பி அமைச்சரவையை கவனிக்க சொந்த அண்ணனே அத்துறையில் இயக்குனராக பணியில் தொடர்கிறாராம்..
சமீபகாலமாக இத்துறை மீது எழுந்துள்ள சில முறைகேடு தொடர்பாக பதிலளிக்குமாறு கடிதம் அனுப்பியதாம் லஞ்ச ஒழிப்புத்துறை.. ஆனால் புகாரை முறையாக எதிர்கொள்ளாமல் பதிலுக்கு காக்கியிடம் பொய் புகார் கூறியுள்ளாராம் அதிகாரி தரப்பு.. இருப்பினும் முறைகேடு புகார்கள் மீது ஆர்டிஐ மூலம் விளக்கம் கேட்டு கிளறி நடவடிக்கை எடுப்பதில் லஞ்ச ஒழிப்பு துறையோ உறுதியாக உள்ளதாம்.. ஆனால் தொடர் எதிர்அம்புகள் பாய்வதால் தாமதமாகி வருகிறதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.